ஐ.டி.பெண் ஊழியர் பெற்றோருடன் தற்கொலை- பரபரப்பு கடிதம் சிக்கியது

திருமண உறவு கசந்ததால் மனஉளைச்சல் காரணமாக பெற்றோருடன் ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் கூறினர்.

Update: 2024-02-24 13:17 GMT

கோவை,

கோவை கவுண்டம்பாளையம் ஜவகர் நகரை சேர்ந்தவர் கணேசன்(வயது65). இவரது மனைவி விமலா(55). இவர்களது மகள் தியா காயத்ரி(25). தியா காயத்ரி ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் தியா காயத்ரிக்கும் , வடவள்ளியை சேர்ந்த தீட்சித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

தீட்சித்தும் ஐ.டி.யில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் பெங்களூரு சென்ற தியா சில மாதங்களிலேயே பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் கணேசன், அவரது மனைவி விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் இறந்த நிலையில் பிணமாக கிடந்தனர்.தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பேக்கரியில் இருந்து கேக் வாங்கி வந்து, அதில் விஷத்தை தடவி 3 பேரும் சாப்பிட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.

போலீசார் நடத்திய சோதனையில் தியா கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எங்களது சாவுக்கு காரணமான யாரையும் சும்மா விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள் என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

தியா காயத்திரி திருமணம் முடிந்ததும், பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்துள்ளார். கணவர், இல்லற வாழ்க்கையில் நாட்டம் இல்லாதவராக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கணவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மகனுடன் வாழுமாறு வற்புறுத்தியுள்ளனர். இந்தநிலையில் மனஉளைச்சல் காரணமாக தியா காயத்திரி கோவை வந்துவிட்டார். தற்கொலைக்கு பின்பு தியா காயத்திரியின் கடிதத்தை கைப்பற்றி, அவரது கணவர் தீட்சீத்திடம் போன் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் தற்போது பெங்களூருவில் உள்ளார். விசாரணைக்கு பின்னர் தீட்சித் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்