ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை
பொள்ளாச்சி அருகே மதுகுடித்து விட்டு ஏற்பட்ட தகராறில், ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே மதுகுடித்து விட்டு ஏற்பட்ட தகராறில், ஐ.டி. ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஐ.டி. நிறுவன ஊழியர்
பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரம் பிரிவு சக்தி நகரை சேர்ந்தவர் சக்கரை தங்கம் (வயது 61). இவர் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் கண்ணன் (33). ஐ.டி. நிறுவன ஊழியர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணமானது. இதற்கிடையில் அவருக்கு குடிபழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவரது மனைவி விவாகரத்து பெற்று கணவரை பிரிந்து சென்று விட்டார்.
இந்தநிலையில் கார்த்திக் மது அருந்தி வந்து வீட்டில் தந்தை தங்கத்திடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது கார்த்திக், தங்கத்தின் சட்டையை பிடித்து, அவரை அடிக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கம், கார்த்திக் கழுத்தில் கிடந்த துண்டை பிடித்து இழுத்தார். மேலும் கழுத்தை துண்டால் நெரித்து படுக்கறையில் கொண்டு சென்று கார்த்திக்கை படுக்க வைத்தார்.
தந்தை கைது
இதனால் கார்த்திக் மயக்க நிலையில் இருந்ததோடு, பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை காரில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கார்த்திக்கின் தந்தை தங்கத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மதுபோதையில் இருந்த மகனுக்கும், தந்தைக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தங்கம் தனது மகனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தங்கத்தை கைது செய்தனர்.