வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் - பீகாரைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் கைது

பாட்னாவில் பதுங்கியிருந்த பா.ஜ.க. பிரமுகர் மணீஷ் காஷ்யப் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-29 14:35 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்லத் துவங்கினர்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து தமிழ்நாட்டிற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட பீகார் மாநில அதிகாரிகள் குழுவினர், போலி வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மிக வேகமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட பயம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 2 பா.ஜ.க. பிரமுகர்கள் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ஒரு நபர் கோர்ட்டில் முன்ஜான்மீன் பெற்றுவிட்ட நிலையில், மற்றொரு நபரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் பீகார் சென்றனர். அங்கு பாட்னாவில் பதுங்கியிருந்த பா.ஜ.க. பிரமுகர் மணீஷ் காஷ்யப் என்ற நபரை கைது செய்த போலீசார், அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து மேல்விசாரணைக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்