பட்டா வழங்கும் விவகாரம்:அவமதிப்பு வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் கலெக்டர் ஆஜர்
பட்டா வழங்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் கலெக்டர் ஆஜரானார்.
பட்டா வழங்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் கலெக்டர் ஆஜரானார்.
அதிகாரிகள் மறுப்பு
மதுரையை சேர்ந்த ரமணிகோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தை எனது பெயரிலும், என் மனைவி பெயரிலும் கடந்த 1994-ம் ஆண்டு கிரையம் செய்தோம். அந்த இடத்திற்கு என் பெயரில் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த நிலம் பஞ்சமி நிலம் எனக்கூறி பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். பின்னர் முறையான விசாரணையில், எனது நிலம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். ஆனாலும் தொடர்ந்து பட்டா வழங்கவில்லை. எனவே எனது நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரருக்கு பட்டா வழங்க தாமதித்த காரணத்திற்காக நில நிர்வாக கமிஷனர், மதுரை மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, அந்த அதிகாரிகள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
கலெக்டர் ஆஜர்
அப்போது நில நிர்வாக கமிஷனர் நாகராஜன், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா ஆகியோர் நீதிபதிகள் முன்பு ஆஜரானார்கள். பின்னர் அவர்கள் சார்பில் உரிய விளக்கத்தை அரசு வக்கீல் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் பட்டா கோரிய மேல்முறையீடு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே தான் எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர். மனுதாரர் பட்டா சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.