வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் திருவிழா கடைகளை ஏலம்விடுவதில் கோவில்- பேரூராட்சி இடையே பிரச்சினை

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் திருவிழா கடைகளை ஏலம்விடுவதில் கோவில்- பேரூராட்சி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-06-26 12:46 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வெட்டு வானத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் ஆடி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு கோவில் அருகே உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக கடைகளுக்கு நிர்வாகத்தின் சார்பாக ஏலம் விடுவது வழக்கம். இந்த ஏலத்தொகையில் பள்ளிகொண்ட பேரூராட்சிக்கு ஒரு தொகையை கோவில் நிர்வாகம் வழங்கி வந்தது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி முதற்கட்டமாக கடைகள் ஏலம் விடப்பட்டது. பேரூராட்சிக்கு தெரியாமல் இந்த ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, கோவில் செயல் அலுவலரிடம் இது சம்பந்தமாக கேட்டுள்ளார். அதற்கு கடைகள் அனைத்துக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏலம் விடப்படும் தொகையில் உங்களுக்கு பணம் கட்ட அவசியமில்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து கடைகள் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில்பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கோவில் எதிரே உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் பேரூராட்சிக்கு சொந்தமான பாதை புறம்போக்கில் உள்ளதும், அதற்கு பட்டா வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்தது. இதனை அடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஏலம் விடும் தொகையில் வழக்கம்போல் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பணம் கட்ட வேண்டுமென கூறினார். இதனால் இரண்டாவது கட்டமாக கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்