வி.ஐ.டி.யில் இஸ்ரோவின் கண்காட்சி
வி.ஐ.டி.யில் இஸ்ரோவின் கண்காட்சி தொடங்கியது. இதில்சதீஷ் தவான் மைய துணை இயக்குனர், பெல் நிறுவன செயல் இயக்குனர், வி.ஐ.டி. வேந்தர் பங்கேற்றனர்.
வேலூர்
வி.ஐ.டி.யில் இஸ்ரோவின் கண்காட்சி தொடங்கியது. இதில்சதீஷ் தவான் மைய துணை இயக்குனர், பெல் நிறுவன செயல் இயக்குனர், வி.ஐ.டி. வேந்தர் பங்கேற்றனர்.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு வி.ஐ.டி.யில் இஸ்ரோவின் 3 நாள் கண்காட்சியை வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''அமெரிக்காவும், சோவியத் யூனியனும் மட்டுமே விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிட்டு வந்த காலம் மாறி இந்தியாவும் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்து வருகிறது. தொழில்நுட்பம், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். கல்வியால் மட்டும் தான் அறியாமையையும், மக்களின் ஏழ்மையையும் அகற்ற முடியும். இதற்கு மத்திய, மாநில அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்றார்.
சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜிவ் சிங் கலந்து கொண்டு பேசுகையில், ''உலக நாடுகளில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பொருத்தவரை இந்தியா முதல் 5 இடங்களுக்குள் உள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தது. எதிர்வரும் காலங்களில் விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும்'' என்றார்.
கவுரவ விருந்தினராக பங்கேற்ற சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் சையது அமித் பேசுகையில், ''
இந்திய விண்வெளித்துறையின் தந்தையாக கருதப்படும் டாக்டர். விக்ரம் சாராபாய் 1960-களில் விண்வெளி ஆய்வு மற்றும் அதன் பயன்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கிணையாற்றும் என்று அப்போதே கணித்தார். விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்று சாமானிய மக்களின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது'' என்றார்.
நாளை வரை இந்த கண்காட்சி நடக்கிறது. இதனையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, போஸ்டர் மற்றும் மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளது. மாணவர்கள் https://wsw.vit.ac.in என்ற இணையம் வழியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்
விழாவில் வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் டாக்டர் எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.