வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி தயார் நிலையில் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திங்கட்கிழமை காலை விண்ணில் பாய்வதற்கு ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இதற்கான 27½ மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்குகிறது.

Update: 2023-05-27 17:54 GMT

'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை நாளை (திங்கட்கிழமை) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது. இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட 'என்.வி.எஸ்.-01' என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

வாகனங்கள் வழி செலுத்துதல்

வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட 2-வது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது. அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். இந்த தொடர் சேவைகளை விரிவுபடுத்த கூடுதலாக 'எல்1 பேண்ட் சிக்னல்'களை உள்ளடக்கியது.

இதற்கான இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர 'கவுண்ட்டவுன்' நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.21 மணிக்கு தொடங்குகிறது. 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்