பாதாள சாக்கடை பணிகளால் தனித்தீவுகளான வீதிகள்
பாதாள சாக்கடை பணிகளால் தனித்தீவுகள் போன்று வீதிகள் காட்சியளிக்கின்றன.;
திருச்சி:
பாதாள சாக்கடை பணிகள்
திருச்சி மாநகரில் அம்ரூத், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணிகள் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அதிக இடையூறு ஏற்படுவதாகவும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டதால் ஒவ்வொரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த பணிகள் முறையாக திட்டமிடப்படாமல் நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி தில்லை நகர் பகுதியில் அனைத்து ரோடுகளும் தோண்டப்பட்டு பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.
தோண்டப்பட்ட சாலைகள்
இந்நிலையில் நேற்று மாலை இங்குள்ள 10 மற்றும் 11-வது வீதிகளில் சாலைகள் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. முக்கிய சாலையின் நடுவே பல நூறு அடி தூரத்துக்கு இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டியபோது அள்ளப்பட்ட மண் சாலையிலேயே கொட்டப்பட்டுள்ளது. இதனால் பக்கவாட்டு வீதிகளுக்கு செல்ல பாதை இன்றி தனித்தீவுகள் போல் காட்சியளிப்பதால், அப்பகுதியினர் வீட்டை விட்டு வேளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த சாலையின் மறுபுறம் சிமெண்டு குழாய்கள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் சென்று வரவும் வழியில்லாத நிலை உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் 4 சக்கர வாகனங்கள் செல்லவே முடியாத நிலை உள்ளது. பல வீதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தடுப்புகள் வைத்து பாதையை அடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவசர காலங்களில் 4 சக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
பாதாள சாக்கடை பணிகளால் தனித்தீவுகளான வீதிகள்
இதேபோல் உறையூர் பகுதியிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சாலைரோடு, ஜெயந்தி பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. 2 சக்கர வாகனங்களும் மிகுந்த சிரமத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் அவதிப்படும் நிலை உள்ளது.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறைப்படுத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளம் தோண்டும்போது வாகனங்கள் தடையின்றி சென்றுவர இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.