காவேரி கூக்குரல் சார்பில் திருச்சியில் 4.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்

அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.;

Update: 2024-05-26 12:02 GMT

திருச்சி:

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்த ஆண்டு நான்கரை லட்சம் மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளன. இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனும் கலந்து கொண்டார்.

விழாவில் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குருவுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் கலைஞர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அந்த விழாவில் கலைஞர் பேசும்போது, 'நாம் மரத்தை வளர்த்தால்; மரம் நம்மை வளர்க்கும்' என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார். அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகள் பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும்.

தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார்.

முன்னதாக, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2024-25) தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடும் பணியை தற்போது தொடங்கி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு 4.5 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு திருச்சியில் 2,92,773 மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்" என்றார்.

2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை ஈஷாவின் காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிகள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்