திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்படுமா?
திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சீர்காழி:
திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேரமும் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலையம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் திருமுல்லைவாசல், ராதாநல்லூர், தொடுவாய், கூழையார், வேட்டங்குடி, தாழந்தொண்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் குறைவான பணியாளர்களை கொண்டு செயல்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் டாக்டர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.
24 மணிநேரமும் செயல்பட வேண்டும்
இதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசர சிகிச்சை பெறுவதற்கு நீண்ட தொலைவில் உள்ள சீர்காழி அல்லது சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமுல்லைவாசல் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.