தரமற்ற பொங்கல் பரிசை அளித்த நிறுவனங்கள் மீது எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ? - டிடிவி தினகரன் கண்டனம்
முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள தி.மு.க அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் திரு.ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ?! இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை 'நாங்கள் மட்டுமே உத்தமர்கள்' என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள்!" என்று கூறியுள்ளார்.