உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என உற்பத்தியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Update: 2022-10-17 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வறண்ட பகுதியான உடன்குடியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டிக்கு தனிச்சிறப்பு உண்டு. இங்குள்ள செம்மணல் தேரியில் உள்ள பனைமரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பதனீர் தனிச்சுவை கொண்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டியை தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் உடன்குடியை அடுத்த குலசேகரன்பட்டினத்தில் பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலை செயல்பட்டது. அந்த ஆலைக்கு பதனீர் பெறுவதற்காகவே திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளை வரையிலும் தண்டவாளம் அமைக்கப்பட்டு தனி ரெயில் இயக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் அந்த ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து அந்த ரெயில் பாதையும் கைவிடப்பட்டாலும், அவற்றின் சுவடுகள் இன்றும் உள்ளன.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

தற்போது உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலானவர்கள் பனங்காடுகளிலும், தோட்டங்களிலும் குடும்பமாகவே பனை தொழிலில் ஈடுபடுகின்றனர். அதிகாலையிலேயே ஆண்கள் பனை மரங்களில் ஏறி பதனீர் எடுத்து வந்தவுடன், பெண்கள் விறகு அடுப்பில் பதனீரை நன்கு காய்ச்சி சுவையான கருப்பட்டி தயாரிக்கின்றனர்.

எனவே, பாரம்பரியமிக்க உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கி நிற்கிறது.

புவிசார் குறியீடு

உடன்குடி வெள்ளாளன்விளை பனையேறும் தொழிலாளி வேல் நாடார்:-

நீண்ட போராட்டத்துக்கு பிறகு சமீபத்தில்தான் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. இதேபோல் நீண்ட பாரம்பரியம் கொண்ட உடன்குடி கருப்பட்டிக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டும். அப்போதுதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நமது கருப்பட்டிக்கு தனி மதிப்பு ஏற்படும். எனவே, பனைத்தொழிலை காப்பாற்றும் வகையில் அரசு உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தரவேண்டும்.

மேலும், பனை தொழிலை ஊக்குவிக்கும் வகையில், அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம் தரமான கருப்பட்டி உற்பத்தி செய்வதை கண்காணித்து, அதற்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தரமான கருப்பட்டியை குறைந்த விலைக்கு விற்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கும் கருப்பட்டியை இலவசமாக வழங்க வேண்டும்.

தற்சார்பு பொருளாதாரம்

உடன்குடி தாண்டவன்காடு வியாபாரி தமிழ்ராஜ்:-

கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். உலகமயமாக்கலுக்கு மாற்றாக தமிழர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற நன்மைகளை தரும் இயற்கை பானமான பதனீர் மற்றும் நுங்கு, பனங்கூழ் போன்றவற்றின் விற்பனையை அதிகரித்து சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினரும் பாதுகாப்பாக பனையேறும் வகையில், தரமான உபகரணங்களை தயாரித்து குறைந்த விலைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்