நூலகம் செல்வோரை முடக்கிவரும் தொழில்நுட்பம் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? ஆசிரியர்கள் கருத்து

மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? என்பது குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-12-15 20:12 GMT

"என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச்செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்கு சொல்லும் அறிவுரை.

வாசிக்கும் பழக்கம்

புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன. அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடி படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.

நூலக வகுப்பு

குழந்தை பருவம் முதல் புத்தக வாசிப்புத்திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது. அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களை தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த நூலக வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன.

இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலக பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது. பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.

புத்தக வாசிப்பு அவசியம்

பள்ளிகளை போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களை தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பினர் வழங்கியிருக்கும் யோசனைகள் வருமாறு:-

அரசு கல்லூரி முதல்வர்

சேலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கலைச்செல்வன்:-

எங்கள் கல்லூரியில் ஒரு பொது நூலகமும், ஒவ்வொரு துறையிலும் தனித்தனி நூலகமும் செயல்பட்டு வருகின்றன. பொது நூலகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அனைத்து பாடப்பிரிவு மாணவ, மாணவிகளும் சுழற்சி முறையில் நூலகத்திற்கு வந்து செல்வதற்கு தனியாக நேரம் ஒதுக்கப்படுகிறது. நூலகங்களை தேடிச்செல்லும் மாணவர்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் நூலகங்களை தேடிச்சென்று தகவல்களை சேகரிப்பதைவிட இணையவழியில்தான் அதிகம் சேகரிக்கிறார்கள். நூலகத்தில் பாடப்புத்தகங்கள், பொது அறிவு புத்தகம், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளிடம் புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் மூழ்கியிருக்கிறார்கள். புத்தக வாசிப்பு திறனை மேம்படுத்தினால் மட்டுமே மாணவ, மாணவிகளின் வாழ்க்கை சிறக்கும்.

ஆர்வமுடன் படிக்கிறார்கள்

தேவூர் அர.குள்ளம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி:-

எவ்வளவு தான் டிஜிட்டல் உலகம் வந்தாலும், மாணவ, மாணவிகள் தேர்வை டிஜிட்டலில் எழுதுவது இல்லை. அதேபோல்தான், டிஜிட்டல் உலகில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும், நூலகங்களில் இருக்கும் புத்தகங்களுக்கு எப்போதுமே மதிப்பு குறைவது இல்லை. அதனை பயன்படுத்துபவர்களுக்கும் அது மதிப்பை கூட்டுகிறது. அந்த வகையில் எங்களது பள்ளியில் மதியம் வேளையில் மாணவ, மாணவிகள் நூலகத்திற்கு செல்ல அனுமதி வழங்குகிறோம். புத்தகங்களை வாசிப்பதால் மாணவர்கள் தங்களது சிந்தனைகளை வளர்த்து கொள்கிறார்கள். புத்தகங்களை ஆர்வமுடன் படிக்கிறார்கள்.

அறிவு, திறமை மேம்படும்

சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்வாணி:-

பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு சுழற்சி முறையில் பாட வேளையில் நூலகத்திற்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். பாடப்புத்தகங்களை தாண்டி கதை, பொது அறிவு, ஆரோக்கியம், போட்டித்தேர்வு என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. ஒரு சில மாணவிகளுக்கு மட்டும் தான் வாசிப்பு திறன் உள்ளது. எனவே மற்ற மாணவிகளும் நூலகத்திற்கு ஆர்வமுடன் வந்து பல்வேறு புத்தகங்களை படித்தால் அவர்களது அறிவு, திறமை மேம்படும். எங்கள் பள்ளியில் தினமும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு இறை வணக்கத்தின்போது நாளிதழில் வெளிவரும் முக்கிய செய்திகளை படித்து குறிப்பு எடுத்து அதை மாணவிகளுக்கு எடுத்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

செல்போனை தான் தேடும் குழந்தைகள்

அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த பெற்றோர் காட்டூர் வைத்தி:-

பள்ளிகளில் நூலகம் என்ற ஒன்று இருப்பதே மாணவர்களுக்கு தெரிவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகங்கள் திறக்கப்படுவதில்லை. குழந்தைகள் செல்போனை பயன்படுத்தும் நேரத்தில் சிறிது அளவு கூட புத்தகங்களை வாசிப்பதில் பயன்படுத்துவது இல்லை. பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், முதலில் பெற்றோரின் செல்போனை தான் தேடுகிறார்கள். அவர்களுக்கு புத்தகங்கள் வாசிப்பது என்றால் என்ன? என்பதை பற்றி சிறிது கூட தெரிவதில்லை. பள்ளி பாட வேளைகளில் வாரத்திற்கு இருமுறையாவது மாணவர்களை பள்ளியில் உள்ள நூலகங்களுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு அங்கு புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் தினமும் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கத்தையாவது மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

விரும்பிய புத்தகத்தை படிப்போம்

சேலம் மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜெசிகா:-

ஒவ்வொரு வாரமும் புத்தக வாசிப்புக்கு என்று தனியாக பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பாடவேளையில் பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து கொடுப்பார்கள். நாங்கள் விரும்பிய புத்தகத்தை எடுத்து படிப்போம். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் நூலகத்திற்கு செல்ல முடிவதில்லை. பெருந்தலைவர் காமராஜர், அப்துல்கலாம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வரலாற்றை புத்தகம் மூலமாகத்தான் தெரிந்து கொண்டோம். அதேநேரத்தில், கூடுதல் புத்தகங்களை வாங்கி வைத்தால் நன்றாக இருக்கும்.

சவால்

பொதுநூலக இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இளம்பகவத்:-

புத்தக வாசிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை போட்டி மூலம் தேர்வு செய்து, அவர்களை தேசிய அளவில், சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் அழைத்து செல்கிறோம். அரசு புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த கொண்டு வந்திருக்கும் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தக வாசிப்பு ஆர்வம் சற்று மேம்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், இந்த பணியை திறம்பட கொண்டு செல்வது ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. டிஜிட்டல் மூலம் பார்ப்பது சுலபம். ஆனால் அதிலும் பாதகமான அம்சங்கள் இருக்கின்றன. அரசின் வாசிப்பு இயக்கம் தொடர் நிகழ்வாக இருக்கும்.

மாணவர்கள் போகாத இடம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட்:-

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போகாத ஒரு இடமாக நூலகம் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை சற்று மாறி இருக்கிறது. மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத்திறனை மேம்படுத்தவும், நூலகங்களில் தேவையான புத்தகங்களை வாங்கி வைக்கவும் கல்வித்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் நூலகங்களில் புத்தகங்கள் அதிகம் இருக்கின்றன. நூலகங்களை நிர்வகிக்க நூலகர் என்ற பதவி கிடையாது. அதற்கென்று ஒரு ஆசிரியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவர் கற்பித்தல் பணியோடு சேர்த்து இதை மேற்கொள்கிறார். எனவே இதற்கென்று தனியாக ஒருவரை நியமித்தால் புத்தக வாசிப்பை மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

=======

எளிய நடையில் கதை புத்தகங்கள்

பள்ளி குழந்தைகள் எளிமையாக படிக்கும் வகையில், கதைகள் அடங்கிய புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த புத்தகங்களில் நிறைய படங்கள், எளிய வார்த்தைகள் இடம்பெற்று இருக்கும் என்றும், 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் அதை பார்த்து, படித்து, கருத்துள்ள கதையை புரிந்து கொள்ளும்படியாக புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்றும் அவர்கள் கூறினர்.

குழந்தை எழுத்தாளர்கள், விருப்பமுள்ள ஆசிரியர்கள் இதில் அந்த கருத்துள்ள கதைகளை எழுதுவதற்கு ஏற்றவாறு ஏற்பாடு நடந்து வருகிறது. வாசிப்பு இயக்ககம் மூலம் இந்த புத்தகங்களை பிரபலப்படுத்தவும், அனைத்து பள்ளி நூலகங்களிலும் இந்த புத்தகங்களை இடம்பெற செய்யவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்