தமிழக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தமிழக அரசு வழங்க இருப்பது பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.
பொங்கல் பரிசு
அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ½ கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது. 2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது.
ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இன்ப அதிர்ச்சி
2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.
கசப்பான அனுபவம்
இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்புடையது அல்ல
அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-
பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம். எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.
இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது. எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
பொங்கல் பண்டிகை கசக்கும்
இதுகுறித்து அரசிராமணி ஓலப்பாளையம் பகுதியில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயி முருகேசன்:-
ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளிடம் நேரடியாக செங்கரும்பு கொள்முதல் செய்யப்படும். இதனால் கரும்பு விவசாயிகள் லாபம் அடைந்து வந்தனர். இந்த ஆண்டு விவசாயிகள் அதிகம் செங்கரும்பு சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. தமிழக அரசு, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக செங்கரும்பு கொள்முதல் செய்யும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அரசு பொங்கல் தொகுப்புடன் செங்கரும்பு வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லாமல் இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் கவலையுடன் இருக்கிறோம். இதனால் செங்கரும்பு விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். பொங்கல் பண்டிகைக்கு அரசு செங்கரும்பு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பொங்கல் இனிக்கும். இல்லையென்றால் நஷ்டம் ஏற்பட்டு பொங்கல் பண்டிகை கசக்கும்.
பரிசுத்தொகுப்புடன் பணம்
சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த ஆசிரியை ஐ.கேர்லின்:- பொங்கல் என்றாலே அரசு பரிசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் இருந்து வருகிறது. ஏனென்றால் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் பொங்கலுக்கு தொகுப்பு அல்லது ரொக்கம் ஏதாவது ஒன்றை பரிசாக கொடுத்து வருகிறது. அது வரவேற்கத்தக்கதுதான். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு சரியானதாக இல்லை. பெரும்பாலான இடங்களில் தரம் குறைந்து காணப்பட்டது. எனவே தொகுப்புக்கு பதிலாக பணமாக வழங்கினால் மக்கள் தங்களுக்கு தேவையானதை, தேவையான அளவு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுவார்கள். அதேநேரத்தில் பொங்கல் தொகுப்புடன், பணமும் கொடுத்தால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
சேலம் சங்கலை ஆசாரிநகரை சேர்ந்த குடும்ப தலைவி லோகநாயகி:- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மக்களின் பண்பாட்டோடு ஒன்றி போனது. உறவுகள் எல்லாம் ஒன்றாய் கூடி மகிழ்கின்ற வேளையில், எந்த வகையிலேனும் குடும்பத்திற்காக ஒரு சிறு பரிசு கிடைக்குமானால் உள்ளத்தில் உவகை பெருகும். அந்த பரிசை அரசே வழங்கும் போது, வழங்குபவரின் கொடை பற்றிய எண்ணம் உயர்ந்ததாக தோன்றும். வெல்லம், அரிசி, கரும்பு, ஏலக்காய் போன்ற சுவை சேர்ப்பு பதார்த்தங்களை தொகுப்பாக வழங்குகிற போது, ஏழை, எளிய மக்கள் நிறைவுடன் திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
விவசாயிகளிடம் இருந்து தொகுப்பிற்காக வாங்கப்படும் பொருட்களால் விவசாயிகளும் பலன் அடைகின்றனர். கடந்த வருடம் பொங்கல் தொகுப்புடன், ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்பட வில்லை என்றாலும் பொங்கல் பரிசை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே பொங்கல் பரிசுத்தொகுப்புடன், பணமும் வழங்கினால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட வசதியாக இருக்கும்.
தித்திப்பான அறிவிப்பு
காடையாம்பட்டி அருகே தாத்தியம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜா:- ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் பரிசு தொகையாக ஒவ்வொரு குடும்ப தலைவியிடம் வழங்க வேண்டும். அவ்வாறு குடும்ப தலைவிகளிடம் பணம் வழங்கும் போது அவர்கள் சிக்கனமாக பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.