தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?

திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

Update: 2023-04-09 19:00 GMT

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.

மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.

காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.

100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.

இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.

தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.

விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

பண்டிகை நாட்கள்

பெரியகுளத்தை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் தனபாலன்:- முன்பெல்லாம் மக்களுக்கு பொழுதுபோக்கு என்றால் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதாக இருந்தது. தொலைக்காட்சிகள் வந்த பிறகு அதில் புதிய படங்கள் ரிலீஸ் ஆன சில மாதங்களுக்குப் பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டன. திரைக்கு வரும் படங்களின் எண்ணிக்கைகளும் பெருகிவிட்டன. முன்பெல்லாம் நல்ல படம் என்றால் 100 நாட்கள் சாதாரணமாக ஓடிவிடும். ஆனால் இன்றைக்கு எந்த படம் வசூலை குவிக்கிறது என்பதை மையப்படுத்தி தான் படத்தின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கும் படங்கள் திரைக்கு வந்தால் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. தற்போதைய சூழலில் ஏழை மக்கள் அதிகம் தியேட்டருக்கு வருவதில்லை. நல்ல படங்கள் என்றால் குடும்பத்துடன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும். மற்ற நாட்களில் கூட்டம் குறைவாக தான் இருக்கிறது. 'ஹவுஸ் புல்' என்ற வார்த்தையை பண்டிகை நாட்களில் தான் பயன்படுத்த முடிகிறது. தியேட்டரில் சவுண்ட், ஏ.சி., இருக்கைகள், தின்பண்டங்கள் என எல்லாம் பெருநகரங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்து கொடுப்பதால் தியேட்டர் தொழில் பல பாதிப்புகளை கடந்தும் உயிர்ப்புடன் இருக்கிறது.

செலவு அதிகம்

கம்பத்தை சேர்ந்த குடும்பத்தலைவி சூரியகலா:- விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. செலவுகளை குறைத்தால் தான் சேமிக்க முடியும் என்ற நிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். முன்பு தியேட்டரில் மட்டும் தான் புதிய படங்கள் பார்க்க முடியும். இன்றைக்கு தியேட்டருக்கு சென்றால் டிக்கெட் விலை, தின்பண்டங்கள் விலை அதிகம் இருக்கிறது. ஒரு மாதத்துக்கு ஆகும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான செலவை விடவும் ஒரு நாள் குடும்பத்தோடு சினிமா பார்க்க தியேட்டருக்கு சென்று வரும் செலவு அதிகம் ஆகிறது. இதற்காக நெட்பிலிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓ.டி.டி. தளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே திரைப்படங்களை பார்த்து விடுகின்றனர். தியேட்டருக்கு செல்வதை விட இது சவுகரியமாகவும், செலவு குறைவாகவும் இருக்கிறது. வேலைப்பளு காரணமாகவும் பலரால் குடும்பத்தோடு தியேட்டருக்கு செல்ல முடிவதில்லை.

சினிமா ரசிகர்கள்

கம்பத்தை சேர்ந்த அசோக்:- சினிமா என்றாலே தியேட்டரில் போய் பார்ப்பதுதான் சுகம். எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே அத்தனை படங்களையும் பார்த்து விடலாம் என்றாலும் நண்பர்களோடு, உறவினர்களோடு, குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி வீட்டில் இருந்து பார்க்கும்போது கிடைப்பதில்லை. முன்பெல்லாம் படம் தொடங்குவதற்கு முன்பாக திரைச்சீலை இசை மற்றும் லைட்டிங்குடன் விலக்கப்படும். அப்போது கூட்டத்தினர் மத்தியில் ஒரு சத்தம் எழும். அதை வீட்டில் இருந்து பார்த்தால் ரசிக்க முடியுமா?. இதுபோன்று மனதுக்கு மகிழ்வை தரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதன் மூலம் மட்டுமே பெற முடியும். படம் பார்ப்பதை ஒரு கொண்டாட்ட மனநிலையில் வைப்பது தியேட்டரில் மட்டும் தான்.

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டியன்:- எத்தனை ஓ.டி.டி. தளங்கள் வந்தாலும் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதற்கு ஈடாகாது. நான் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகன். 1998-ம் ஆண்டில் இருந்து அவருடைய ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்து வருகிறேன். முதல் நாள் முதல் காட்சியில் கொண்டாட்டத்தோடு படம் பார்ப்பது திருவிழா போன்றது. இன்றைக்கு டிக்கெட் கட்டணம் அதிகம் இருக்கிறது. இருந்தாலும் சினிமா என்பது பல தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகிறது. தியேட்டர் தொழிலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தியேட்டரில் சென்று படம் பார்க்கும் போது நண்பர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பும், புதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள். எனவே தியேட்டரில் படம் பார்ப்பதை தான் விரும்புகிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்