சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-04 19:12 GMT

மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டிய பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றை பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்

பெரம்பலூர் மாவட்ட தலைமை சுற்றுலா வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சந்தோஷ்:- ஏற்கனவே டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வந்தோம். மேலும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகிறோம். வாகனங்களின் உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் சுற்றுலா வேன்களை தொடர்ந்து இயக்குவதற்கு படாதபாடு பட்டு வருகிறோம். ஏற்கனவே சுங்கச்சாவடியில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது, வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

தற்போது கோடை விடுமுறை சுற்றுலாவுக்கு சவாரி கிடைக்கும். இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்துள்ளதால் வேன் வாடகை கட்டணமும் உயர வாய்ப்புள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சுங்க கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும் உயரும் என்பதால் மேலும் பாதிக்கப்படுவார்கள். சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விடாமல் சுங்கச்சாவடியை மத்திய அரசே நடத்தி, வாகனங்களுக்கு தகுந்தாற்போல் குறைந்த அளவே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

கட்டணங்களை குறைக்க வேண்டும்

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் குமார்:- நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கார் டிரைவராக இருந்து வருகிறேன். முன்பு சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டில் மட்டுமே சுங்கச்சாவடி இருந்தது. வாகனங்களுக்கு தகுந்தாற்போல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் வசூல் செய்தனர். ஆனால் தற்போது 4 மற்றும் 6 வழிச்சாலை அமைத்த பின்னர், கூடவே சுங்கச்சாவடிகளையும் அமைத்து விடுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகனங்கள் எண்ணிக்கை குறைவு. தற்போது வாகனங்கள் அதிகமாக உள்ளது. சுங்கச்சாவடிகளில் நிமிடத்திற்கு பல வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை பாஸ்டேக் முறையில் செலுத்தி செல்கின்றனர். கடந்த காலங்களை விட தற்போது வாகனங்கள் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் எண்ணில் அடங்காத வாகனங்கள் கடந்து செல்கின்றன.

எனவே சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும். சுங்க கட்டண உயர்வால் வாகனங்களில் வாடகை மற்றும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களின் கட்டணங்களையும் உடனடியாக பாதியாக குறைக்க வேண்டும். மேலும் பாஸ்டேக் முறை இல்லாத வாகனங்களில் கார் ஒன்று செல்கிறது என்றால் ரூ.180 செல்வதற்கு மட்டும் வாங்கி கொள்கின்றனர். அதுபோலவே மீண்டும் வருவதற்கு ரூ.180 வசூல் செய்கின்றனர். மேலும் சுங்கச்சாவடிகளை 5 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கக்கூடாது. சாலைகளை பராமரிக்கிறோம் என்று கூறி நீண்ட காலத்திற்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக இருந்து வரும் சுங்கச்சாவடிகளை உடனே எடுக்க வேண்டும்.

வேதனை அளிக்கிறது

திருமாந்துறை சுங்கச்சாவடி வழியாக காரை ஓட்டிச்சென்ற ராஜா- சுங்கச்சாவடிகள் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில், ஆண்டுதோறும் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அடிக்கடி வாகனங்களில் செல்பவர்களுக்கு கட்டண உயர்வு மிகவும் சிரமத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இது போன்று வாகனங்களுக்கு கட்டண உயர்வு செய்வதன் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலையும் உயர்கிறது. எனவே சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை தவிர்க்க வேண்டும்.

ரமேஷ்:- ஏற்கனவே பொதுமக்கள் பல்வேறு பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டண உயர்வு செய்யப்படுகிறது. இதனால் மேலும் விலைவாசி உயரும் நிலை உள்ளது. கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சில பகுதிகளில் சாலைகள் சரியாக இல்லை. அவற்றை முறையாக பராமரித்து, சீரமைக்க வேண்டும்.

சிரமத்திற்கு உள்ளாகிறோம்

டிரைவர் சங்கர்:- சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வால் எங்களைப்போன்ற லாரி டிரைவர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். சில சமயங்களில் பலமுறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அதிக அளவில் கட்டணம் செலுத்துகிறோம். தினமும் நான் 10 முறை சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வருகிறேன். 10 ரூபாய் உயர்த்தப்பட்டாலும் எனக்கு ரூ.100 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டணம் உயர்த்துவதை தவிர்த்து, தேவையற்ற இடங்களில் சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்