கோவை
ஆசியாவிலேயே 2-வது சுவையான குடிநீர் என்ற பெருமையை பெற்ற சிறுவாணி, எப்போதுமே தண்ணீர் நிறைந்து இருக்கும் பில்லூர், பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படும் ஆழியாறு அணை ஆகிய அணைகள்தான் கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர்-1, மற்றும் 2, கவுண்டம்பாளையம்-வடவள்ளி, ஆழியாறு ஆகிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரேஸ்கோர்ஸ், ஆர்.எஸ்.புரம், புலியகுளம் உள்பட 38 வார்டு மக்களுக்கு சிறுவாணி குடிநீர் வழங்கப்படுகிறது.
சீரான குடிநீர் வினியோகம் இல்லை
கணபதி, சரவணம்பட்டி, துடியலூர் மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பில்லூர் குடிநீரும், குனியமுத்தூர் பகுதிக்கு ஆழியாறு குடிநீரும் மீதமுள்ள பகுதிகளுக்கு அனைத்து திட்டத்தில் உள்ள குடிநீரையும் சேர்த்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணைகளில் இருந்து தினமும் 277 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குடிநீர் பொதுமக்களுக்கு முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.
தற்போது எடுக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவை வைத்து நிர்ணயம் செய்தால் தினமும் குடிநீர் வினியோகம் செய்யலாம். இல்லை என்றால் 2 நாட்களுக்கு ஒருமுறையாவது வினியோகிக்கலாம். ஆனால் ் சில பகுதிகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை, 15 நாட்களுக்கு ஒருமுறை, சில பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை என்று வினியோகம் செய்யப்படுகிறது. இன்னும் சில பகுதிகளுக்கு மாதத்துக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
நடவடிக்கை இல்லை
தேவைக்கு அதிகமாக அணைகளில் இருந்து குடிநீர் எடுத்தும் ஏன் சீராக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை?, வினியோகத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கிறார்களா? அல்லது அவர்கள் எதுவுமே கண்டுகொள்வது இல்லையா என்ற கேள்வியிலும் பலர் உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் அதை காதில் வாங்கிக்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. இதற்கு என்ன காரணம்?, பொதுமக்களின் நலனில் அதிகாரிகளுக்கு அக்கறை இல்லையா? அல்லது தனக்கு கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களை உயர் அதிகாரிகள் சரியாக கண்காணிப்பது இல்லையா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
280 எம்.எல்.டி. தேவை
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். அதில் ஒருவருக்கு சராசரியாக 140 லிட்டர் தினமும் தேவையாக கணக்கிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் தினமும் குடிநீர் வழங்க 280 எம்.எல்.டி. (28 கோடிலிட்டர்) தண்ணீர் தேவை. ஆனால் 4 குடிநீர் திட்டங்களின் கீழ் தினமும் 270 எம்.எல்.டி (27 கோடி லிட்டர்) குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக 20 எம்.எல்.டி.யை குறைத்தாலும் தினமும் 250 எம்.எல்.டி தண்ணீர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கிடைக்கிறது. இந்த தண்ணீரை வைத்து குறைந்தது 2 நாட்களுக்கு ஒருமுறையாவது 100 வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்யலாம். ஆனால் அதை செய்வது கிடையாது.
ஓட்டல்களுக்கு விற்பனை
மேலும் குடிநீர் வினியோகம் செய்வதை கண்காணிக்க ஒரு மண்டலத்துக்கு 4 உதவி செயற்பொறியாளர்களும், ஒரு வார்டுக்கு குடிநீர் பிரிவை சேர்ந்த 4 ஊழியர்களும் உள்ளனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதை கண்காணிக்கதான் முக்கிய வேலை ஆகும். ஆனால் அவர்கள் அதை சரிவர செய்வது கிடையாது. குடிநீர் போதிய அளவுக்கு கிடைத்தாலும் அதை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யாமல் ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள்.கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரிவை சேர்ந்த அதிகாரிகள், தண்ணீரை விற்பனை செய்வதாக கவுன்சிலர்களும் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு ஒரு அளவுக்கு தான் தண்ணீரை திறந்துவிட வேண்டும். ஆனால் அதிகளவில் வினியோகம் செய்யப்படுகிறது. அதுபோன்று சில ஓட்டல்களுக்கு வாரத்துக்கு 2 முறை லாரிகள் மூலம் குடிநீரை வினியோகம் செய்யலாம்.ஆனால் குறிப்பிட்ட ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 8 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரி தண்ணீரை ரூ.3 ஆயிரத்துக்கு விற்று வருகிறார்கள். இதை கண்காணித்து தடுத்து நிறுத்தினால் கோவை மாநகர பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆனால் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர் அதிகாரிகள் அதை செய்யாமல் மவுனம் சாதிப்பதுதான் ஏன் என்பது தெரியவில்லை. ஆகவே இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதியில் உள்ள மக்களுக்கு குறைந்தது 3 நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவை கணபதி பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதாக தவறான பதிலை கூறுகிறார்கள். 10 நாட்களுக்கு ஒருமுறை 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கிறார்கள். அதுபோன்று குனியமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள சில பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எது எப்படியோ...கோவைக்கு போதுமான அளவில் குடிநீர் கிடைத்தும் போதாத நிலையில் தவிக்க வைக்கிறது. இதற்கு காரணம் கொள்ளை போகிறதா....குடிநீர் என்கிற கேள்வியை எழுப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.