500 மதுக் கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா?
500 மதுக் கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா? என்று பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
தமிழ்நாடு சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதாவது பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகே உள்ள மதுபானக்கடைகள் மூடப்படும் என்பதே அந்த அறிவிப்பு ஆகும்.
தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 332 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கின்றன. அதில் மூடுவதற்காக 500 கடைகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த 500 கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டு விட்டன.
11 டாஸ்மாக் கடைகள் மூடல்
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இதில் 11 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சிதம்பரம் வி.ஜி.பி. தெருவில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், பரங்கிப்பேட்டை சாவடி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் ஓமாம்புலியூர்ரோடு, காட்டுமன்னார்கோவில் இரட்டை தெரு, பண்ருட்டி பணிக்கன்குப்பம், விருத்தாசலம் ஆயியார் மடம், சிதம்பரம் தாலுகா வாக்கூர், வடலூர் பார்வதிபுரம், ஸ்ரீமுஷ்ணம் கானூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. இதனால் குடிபிரியர்கள் டாஸ்மாக் கடை வரை வந்து திரும்பிச்சென்றனர். சிலர் அதன் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று மது பாட்டில்களை வாங்கிச்சென்றனர். இருப்பினும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
சிரமம்
காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த மது பிரியர் மகேஷ்குமார் கூறுகையில், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வந்தது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதில் 2 டாஸ்மாக் கடைகள் இன்று (நேற்று) முதல் மூடப்பட்டது. இது எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இருக்கும் ஒரே கடைக்கு தான் அனைவரும் செல்ல வேண்டும். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பிரச்சினை ஏற்படும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே ஊருக்கு வெளியே கூடுதலாக ஒரு டாஸ்மாக் திறந்தால் மகிழ்ச்சி தான் என்றார்.
மறுவாழ்வு முகாம்
காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆரோக்கியம் கூறுகையில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு எங்கள் பகுதியில் இயங்கி வந்த 2 டாஸ்மாக் கடைகளை மூடி உள்ளது. இதற்காக பொது மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேவேளை மது பழக்கத்தை கைவிட நினைக்கும் மது பிரியர்களுக்கு மறுவாழ்வு முகாம் நடத்தவும் அரசு உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றார்.
தொல்லை இருக்காது
சேத்தியாத்தோப்பு பெரியகுப்பம் வீரமணி கூறுகையில், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்ட சென்னை - கும்பகோணம் பிரதான சாலையில் மத்திய கூட்டுறவு வங்கி, தனியார் வங்கி, நகைக்கடைகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இதனால் இந்த கடைக்கு வரும் மது பிரியர்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தார்கள். சிலர் மது பிரியர்கள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு, கடை வாசலில் படுத்து கிடப்பார்கள். தற்போது இந்த கடை மூடப்பட்டதால் மது பிரியர்களின் தொல்லை இனி இருக்காது என்றார்.
500 மதுக் கடைகளை மூடியது மகிழ்ச்சி தருகிறதா?
பொதுமக்கள் கருத்து
விருத்தாசலம் சீனிவாசன் கூறுகையில், விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடையை மூடியதால் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்பகுதியில் 2 கடைகள் இருந்தன. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வர முடியாமல் தவித்து வந்தனர். குடி பிரியர்கள் குடித்து விட்டு அசிங்கமாக பேசுவதும், அரை குறை ஆடையுடன் சுற்றி திரிவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஒரு கடையை மூடியதை வரவேற்கிறோம். இருப்பினும் இதன் அருகில் மற்றொரு டாஸ்மாக் கடையும் இருக்கிறது. அதையும் மூடினால் தான் எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். குறிப்பாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும். தேவைப்பட்டால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைக்க வேண்டும் என்றார்.