'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?

பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-03 18:33 GMT

ஒரே போலீஸ் சீருடை

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு கடந்த 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைத்துக்கொள்கின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

வேறுபாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல் டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

சாத்தியம் இல்லை

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.

நடைமுறைக்கு பொருந்தாது

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.

இதேபோல் மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.

உத்தரவு வந்தால் கடைப்பிடிப்பார்கள்

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், போலீசாருக்கு நாடு முழுவதும் ஓரே சீருடை என்பது அரசின் திட்டமாகும். இது தொடர்பாக இன்னும் அறிவிப்பு எதுவும் வரவில்லை. தற்போதைக்கு கலந்தாலோசனை மட்டும் செய்து வருகின்றனர். ஏற்கனவே போலீசாரின் சீருடையை மாற்றி அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. அதன்பின் அறிவிப்பு எதுவும் வரவில்லை. தற்போது போலீசாருக்கு அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக ஒரே நாடு, ஒரே சீருடை என்ற அடிப்படையில் உத்தரவு வந்தால் அதனை அனைவரும் கடைப்பிடிப்பார்கள். அரசின் உத்தரவு வந்த பிறகு தான் இது நடைமுறைக்கு வரும். காவல்துறையில் அனைவருக்கும் ஓரே மாதிரியாக சீருடையாக இருக்கும் என்றார்.

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல்

கல்வியாளர். கறம்பக்குடியை சேர்ந்த கல்வியாளர் ஸ்டாலின் சரவணன்:-

பிரதமர் மோடி நாடு முழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாக உள்ளது. காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிக் காக்க இந்த சீருடை திட்டம் எந்த வகையில் வலு சேர்க்கப்போகிறது. ஏற்கனவே மாநிலப் பட்டியலில் இருந்து கல்வித்துறை பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது போல் காவல்துறையை நகர்த்த திட்டமா? என்ற சந்தேகம் அதிகரிக்கிறது.

காவல்துறையில் சீர் செய்வதற்கு நிறைய உள்ளன. அரைக்கால் சீருடை முழுக்காலுக்கு மாறவே இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 25 ஆண்டுகள் ஆகின. இதில் இதுபோன்ற முன்மொழிவுகள் நிர்வாக முறையை பின்நோக்கி கொண்டு செல்லும். இப்போது பிரதமர் பேசி உள்ள காவல் துறை சீருடை கருத்து பள்ளி சீருடை குறித்தும் எதிர்காலத்தில் வரலாம் என்ற அச்சத்தை விதைக்கிறது. ஒவ்வொரு மாநிலக் காலநிலை, பண்பாடு சார்ந்த சீருடையை பின் பற்றுவதே சிறந்தது. மலைப் பகுதியில் கோட் அணிவது சிறந்தது. வெயில் அதிகம் நிலவும் பகுதியில் பருத்தி சீருடை அணிவதே தகுந்தது. மேலும் பண்பாடு, மொழி, உடையால் வேறுபட்டாலும் இந்தியர்கள் என்று ஒன்று படும் வகையில் வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது தனிச் சிறப்பு என்றார்.

காவல் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையில் கவனம்

விராலிமலையை சேர்ந்த கல்லூரி மாணவி பஞ்சவர்ணம்:- நாடு முழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை என்பதால் எந்த ஒரு முன்னேற்றமும் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை. சமீபகாலமாக ஆங்காங்கே போலீசார் பணிச்சுமை, மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நடந்தேறி வருகிறது. எனவே காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை கண்டறிந்து அதனை சரி செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதே போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் நன்மையாக இருக்கும். மேலும் பொதுமக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து அதனை சரி செய்யும் வண்ணம் காவல்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.

போலீசாரின் சீருடையில் மாற்றம் தேவையில்லை

அறந்தாங்கி எல்.என்.புரதத்தை சேர்ந்த சுதாகர்:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது போலீசாருக்கு வழங்குவதால் எந்த மாநிலத்தை சேர்ந்த போலீசார் என்பது பொதுமக்களுக்கு தெரியாது. பிறமாநிலங்களுக்கு போலீசார் செல்லும் போது சீருடையை பார்த்தே இந்த போலீசார் இந்த மாநில போலீசார் என்று கண்டுபிடித்து விடலாம். ஒரே சீருடை என்றால் போலியான சீருடை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. சீருடையை சமூக விரோதிகள் தவறான விஷயங்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அதனால் போலீசார் சீருடையில் மாற்றம் ஏதும் தேவையில்லை என்றார்.

ஓரே தேர்தல் முறையை கொண்டு வருவது

கீரமங்கலம் பனசக்காடு சமூக ஆர்வலர் அன்பரசன்:- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சீருடை என்று அத்தனையும் ஒன்றே என்ற நிலைக்கு கொண்டு வரப் பார்க்கிறார்கள். அவர்கள் நினைப்பது ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதும், ஒற்றை மொழி இந்தி என்று கொண்டு வரவும் இது ஒரு முன்னோட்டமாக பார்க்கிறோம். இப்போது வட இந்தியர்கள் நாடு முழுவதும் பரவி தென் மாநில இளைஞர்களின் வேலைகளை பறித்துக் கொண்டது போல தான் தேர்தலிலும் இருக்கப் போகிறது. அதற்கான அடிகோல் தான் ஒரே என்ற வார்த்தை என்றார்.

பொதுமக்களிடையே குழப்பம்

விராலிமலை, ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் திவாகர்:- ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற திட்டம் தேவையில்லை. தற்போதைய நிலையே தொடர வேண்டும். நாட்டில் ஒவ்வொரு மாநில போலீசாருக்கும் சீருடையானது வெவ்வேறு கலரில் உள்ளது. ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானது தமிழக போலீஸ் என்ற ஒரு நற்பெயர் உள்ளது. அந்த வகையில் மும்பை, டெல்லி, கல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு போலீசார் விசாரணைக்கு செல்லும்போது அங்குள்ள பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தமிழக போலீசாரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பான மரியாதை மற்றும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதேபோல வெளி மாநில போலீசார் தமிழ்நாட்டிற்கு குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வரும்போது இங்குள்ள பொதுமக்கள் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால் நாட்டில் உள்ள அனைத்து போலீசாருக்கும் ஒரே சீருடையாக இருக்கும் பட்சத்தில் அவர்களை எந்த மாநில போலீசார் என்று அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும். உதாரணமாக தமிழக எல்லையில் உள்ள மற்ற மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது அவர்கள் எதிர்பாராத விதமாக ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் எந்த மாநில போலீசார் என்று அடையாளம் காண்பதில் 2 மாநில பொதுமக்களுக்கும் குழப்பம் ஏற்படும். அதனால் போலீசருக்கான சீருடை என்பது தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்