பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
வெண்மை புரட்சி
கடந்த 1950-60 காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.
இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின், பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.
விலை உயர்வு
இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுமக்கள் கருத்து
பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பது குறித்து பால் முகவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கறவை மாடுகளுக்கு காப்பீடு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர் ராமராஜன்:- பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்று திகழ்கிறது. பால் உற்பத்தியாளர்கள் பசும்பால், எருமைப்பால் ஆகியவற்றின் கொள்முதல் விலையை லிட்டருக்கு தலா ரூ.10 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தியுள்ளது. இது மிகவும் குறைவு என்றாலும் வரவேற்கத்தக்கது. தற்போது கறவை மாடுகளின் தீவனம் விலை உயர்ந்து கொண்டே போகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென்று ஏற்படும் நோய் தாக்குதலால் மாடுகள் இறந்து விடுவதால் கால்நடை வளர்ப்போர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கு நோய் தாக்குதல் ஏற்படும் என்று முன்கூட்டியே தெரிந்தால், அதற்கான கால்நடை மருத்துவ முகாமினை அனைத்து கிராமங்களில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தில் பால் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் சேர்ந்து இலவசமாக காப்பீடு செய்து கொடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 24 மணி நேரம் சிகிச்சை அளிக்க வசதியாக அதிநவீன வசதிகள் கொண்ட கால்நடை மருத்துவமனையை அரசு அமைக்க வேண்டும்.
ஏழை, எளிய மக்கள் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தை சேர்ந்த புஷ்பா:- தற்போது தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த விலை உயர்வை விற்பனை செய்யப்படும் பால் விலையில் உயர்த்தி ஈடுகட்டப்படுகிறது. இதனால் தற்போது பால் விலை லிட்டருக்கு ரூ.4 முதல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் நடுத்தர மக்கள் பால் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். பால் விலை உயர்வினால் எழை, எளிய மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த விலை உயர்வை, வேறு அத்தியாவசியமற்ற பொருட்களான மது உள்ளிட்டகளின் மீது உயர்த்தியிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.