சொத்து பிரச்சினையில் மூதாட்டி கொலையா?
சொத்து பிரச்சினையில் மூதாட்டி கொலையா?
கருமத்தம்பட்டி
கருமத்தம்பட்டி அருகே மூதாட்டி கொலைக்கு சொத்து பிரச்சினை காரணமா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி கொலை
கோவை கணியூர் கங்காலட்சுமி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கணபதியப்பன் (வயது 76). இவரது மனைவி பாப்பம்மாள் (72), சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாளை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பாப்பம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை விசாரணை
கொலை செய்யப்பட்ட மூதாட்டி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடப்படவில்லை. மேலும் வீட்டில் இருந்த பணம், நகை எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. எனவே பணம், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்படவில்லை என தெரியவந்தது. மேலும் மூதாட்டியை கொலை செய்த நபர்களை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மூதாட்டியின் உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், செல்போன் அழைப்புகள் வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே மூதாட்டி பாப்பம்மாள் பெயரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சொத்து ஒன்று வாங்கப்பட்டு உள்ளது.
சொத்து பிரச்சினை
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வந்து உள்ளது. இந்த வழக்கில் மூதாட்டிக்கு ஆதரவாக கோர்ட்டில் இருந்து தீர்ப்பு வந்த சில நாட்களில் இந்த கொலை நடைபெற்றதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. எனவே சொத்து பிரச்சினை காரணமாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.