ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?பொதுமக்கள் கருத்து

ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2023-05-05 19:31 GMT

'எத்தனை நாளா சொல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'

'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'

இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்து கொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.

ஆன்லைன் முறை

முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப் பின்பற்றி வந்தனர்.

இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்ட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இது பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிதங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பாதிப்புக்கு உள்ளாக்கும்

பெரம்பலூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காமராஜ்:- தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் மாதம் ஒரு முறை மின் அளவு கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால், அதனை ஆன்லைனில் கட்டச்சொல்லும் அறிவிப்பு மின் நுகர்வோர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில சமயங்களில் கடைசி நாளில் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும்போது, செலுத்தவில்லை என்று வருகிறது. அதற்கு மறுநாள் அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் மின் அளவு கணக்கீடு செய்ய வரும்போது கூடவே கட்டணத்தையும் வசூலித்து சென்றால் நன்றாக இருக்கும்.

கட்டாயப்படுத்தக்கூடாது

வி.களத்தூரை சேர்ந்த வக்கீல் சீனிவாசராவ்:- இந்த அறிவிப்பு கிராமப்புற மக்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். இந்த அறிவிப்பு குறித்து மாவட்டந்தோறும் மின் நுகர்வோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அமல்படுத்த வேண்டும். ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் வந்தால் ஆன்லைன் மூலம் தான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. கவுண்ட்டர்கள் மூலம் செலுத்தவும் மின் நுகர்வோர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இ-சேவை மையத்தை நோக்கி...

செம்பியக்குடியை சேர்ந்த சிவரஞ்சனி:- நகர்ப்புறங்களில் பலர் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி விடுகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் அத்தகைய நிலை இல்லை. தற்போது ரூ.1,000-க்கு மேலாகவோ, அதற்கு குறைவாககோ என எவ்வளவு மின் கட்டணம் வந்தாலும், தங்கள் பகுதியில் உள்ள உள்ள மின் அலுவலகத்திற்கு சென்றுதான் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். ஆனால் இனி 1,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் வந்தால், கட்டணத்தை செலுத்த இணைய சேவை மையத்தை நோக்கி பொதுமக்கள் செல்ல வேண்டி இருக்கும். அங்கு மின் கட்டணம் மட்டுமின்றி, அதற்கான சேவை தொகையையும் சேர்த்து கொடுக்க வேண்டியது இருக்கும். செல்போனில் செயலி வைத்திருப்பவர்களுக்கு, ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்த தெரிந்தவர்களுக்கு இந்த நடைமுறை சுலபமாக இருக்கலாம். ஆனால் அதனை பற்றி அறியாதவர்கள், பிறரின் உதவியுடனேயே மின் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படலாம். எனவே பலதரப்பட்ட மக்களுக்கு இந்த நடைமுறை சிரமத்தையே ஏற்படுத்தும்.

ஏற்புடையது அல்ல

வாழைக்குறிச்சியை ேசர்ந்த விவசாயி வேதநாயகம்:- ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்பது, விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ஏற்புடையது அல்ல. குறிப்பாக விவசாயிகளுக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கான அடிப்படை அறிவு கட்டாயமாக தேவைப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது. இருப்பினும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த முடியுமா? என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் அனைத்து நிலைகளிலும் மாற்றம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்