சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?

பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான்.

Update: 2023-06-25 18:42 GMT

'பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வச்சிருக்கீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.

சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க? ...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.

இணைய மோசடி

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தமிழகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில், 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி மாணவர்கள் மற்றும் அதிகாரியிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-

தொழில்நுட்ப வளர்ச்சி

அரிமளம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அரவிந்த்:- சைபர் கிரைம் குற்றங்கள் தற்போது அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தான். உதாரணமாக கடந்த காலங்களில் மின்கட்டணம், செல்போன் ரீசார்ஜ் செய்வது, எல்.ஐ.சி. தவணை தொகை செலுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று பணம் செலுத்துவோம். ஆனால் தற்போது அனைத்து வேலைகளையும் செல்போன் மூலம் செய்து விடுகிறோம். மேலும் இன்று பாக்கெட்டில் ஒரு பைசா கூட இல்லாமல், வங்கிக்கணக்கில் பணம் இருந்தால் போதும். எங்கேயும் சென்று வீடு திரும்பலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போடும் போது கூட செல்போன் மூலம் பணம் செலுத்துகிறோம். ஏன் சிறிய பெட்டிக்கடை, டீக்கடைகளில் பணம் செலுத்தும் போதுகூட இன்று ஜிபே, போன் பே ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கி விட்டோம். அதனால் நம்மை ஏமாற்றுபவர்களும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்ற தயாராகி விட்டனர்.

வங்கிக்கு புகார் அளிக்கலாம்

காரையூர் அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்த உலக கணேசன்:- மாறிவரும் நவீன காலத்தில் தொழில்நுட்பம் எவ்வளவுதான் மக்களுக்கு நன்மை செய்தாலும் அந்த தொழில்நுட்பத்தில் உள்ள மாற்று வழியை கண்டுபிடித்து சில நபர்கள் நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர். பண பரிவர்த்தனைகளில் வங்கிகள் முக்கிய பங்காற்றுவதால் அதன் பேரில் பல மோசடிகள் அரங்கேற்றப்படுகிறது. பாமர மக்களில் சிலர் வங்கி மேலாளர் என கூறியதும் ஒரு பயத்துடனும், பதற்றத்தில் அவர்கள் கேட்கும் ரகசியங்களை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு எவரேனும் செல்போனில் அழைத்தால் மக்கள் சற்றும் யோசிக்காமல் அந்த இணைப்பை துண்டித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு புகார் அளிக்கலாம். வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனடியாக அரசின் இலவச அழைப்பு எண்ணான 155260 என்ற எண்ணுக்கு 24 மணி நேரத்துக்குள் அழைத்து தங்களது பணத்தை வெளியே எடுக்காதவாறு முடக்கி வைக்கலாம். என்னதான் அரசு மக்களின் பணத்தை பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்தாலும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே இந்த திருட்டு கும்பலை ஒழிக்க முடியும்.

விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்

கந்தர்வகோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி:- சைபர் கிரைம் குற்றங்களால் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். சமூக ஊடகங்களில் தங்களை பற்றிய சுய விவரங்களையும், புகைப்படத்தையும் வெளியிடுவதால் அதை பயன்படுத்தி பெண்களுக்கு பல்வேறு வழிகளில் சைபர் கிரைம் குற்றங்கள் அரங்கேற்றப்படுகிறது. இணையத்தின் மூலம் யாரைப்பற்றி வேண்டுமானாலும் பல்வேறு வதந்திகளையும், ஆள்மாறாட்டம், சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை மர்ம ஆசாமிகள் வெளியிடுகிறார்கள். இதன்காரணமாக பெண்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள், மன அழுத்தத்தை உருவாக்குகின்றனர். இந்தியாவில் சைபர் கிரைம் அச்சுறுத்தல் தொடர்பாக குறிப்பிட்ட சட்டம் இல்லை. ஆனால் இதை எதிர்கொள்வதற்கு ஐ.டி. சட்டம்-67 போன்றவை உள்ளன. எனவே இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இணைய ஊடகங்களை விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்.

சிறை தண்டனை

முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த வக்கீல் அஜ்மல்கான்:- சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டங்களில் நிறைய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக திருத்தம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டங்களில் இரு வகைகளிலும் சைபர் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை பெற்று தருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது உள்ள நிலையில் சைபர் குற்றம் மூலம் பொருளாதாரம் சார்ந்த தவறுகள் நடைபெற்றாலும் உடனடியாக அவர்களுடைய பணத்தை மீட்டு தருவதற்கான அனைத்து வழி வகைகளும் சட்டப்பூர்வமாக உள்ளன. அதுபோல் இணையதளங்களில் ஆபாச படங்களை வெளியிடுவது, முகம் மாற்றம் செய்யப்பட்ட ஆபாச படங்களை வெளியிடுவது, மைனர் பெண் அல்லது ஆணின் பெயர் அல்லது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிடுவது உள்ளிட்டவை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் கடுமையான குற்றங்களாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. ஆபாச படங்கள் வெளியிடுவது போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.5 லட்சம் வரை வழங்கப்பட்டு அத்தொகை குற்றவாளிகளின் சொத்தின் மூலம் ஈடு செய்யப்படும். அதுபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிப்பதற்கான கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன.

கவர்ச்சியான தகவல்கள்

திருமயம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பாலாஜி:- தற்போது இளைஞர்கள், மாணவிகள் செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சில கும்பல் செல்போன் மூலம் சில கவர்ச்சியான தகவல்களை பரப்பி நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான இளைஞர்களும், பொதுமக்களும் ஏமாந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வு செய்தாலும் செல்போன் மோகத்தில் மூழ்கி இன்னும் ஏமாந்து கொண்டே தான் இருக்கின்றனர். எனவே செல்போனை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும். மேலும் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி தவறுதலாக பயன்படுத்தி எதுவும் இழந்துவிட்டால் சைபர் கிரைம் போலீசாரை உடனடியாக அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள்

விராலிமலை அருகே உள்ள வேலூரை சேர்ந்த மாணவர் கலைவாணன்:- தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் அபரிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைக்கு செல்போன், இன்டர்நெட் பயன்படுத்துவது என்பது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்கிறதோ அதே அளவிற்கு அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்படும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. செல்போன் பயன்பாடு என்பது கடந்த காலத்தை காட்டிலும் தற்போது அவற்றை பற்றி அறிந்து கொள்ளும் முன்னரே பயன்படுத்தும் நிலை உள்ளது. அதற்கு உதாரணம் கொரோனா காலக்கட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்தது ஒரு சான்றாகும். இன்டர்நெட்டை பயன்படுத்தும் போது படிக்கும் தகவல்களை தவிர தேவையற்ற சில தகவல்களும் நாம் பார்க்கும் திரையில் வரும். அப்படி வரும் தகவல்களை நாம்தேர்வு செய்யும்போது அதன் மூலமாக நமது தரவுகளை திருடுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதேபோல் சைபர் குற்றங்கள் செய்யும் சிலர் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை குறிவைத்து பல்வேறு விளையாட்டுகளை அறிமுகம் செய்தும், சில நேரங்களில் ஏ.டி.எம். கார்டை புதுப்பித்து தருகிறோம் அல்லது வெளிநாடுகளில் வேலை வாங்கி தருகிறோம் என பல்வேறு வகைகளில் ஆசை வார்த்தைகள் காட்டி மோசடியில் ஈடுபடுகின்றனர். என்னதான் குற்றங்களை கண்டுபிடிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் "வருமுன் காப்போம்" என்ற பழமொழிக்கு இணங்க இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக தங்களுக்கு தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இது போன்ற குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்காது.

சைபர் கிரைம் உதவி எண்

புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- அறிமுகமில்லாத செல்போன் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் குறுஞ்செய்தியை நம்பி உங்களது ஆதார், பான்கார்டு, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவிக்க வேண்டாம். மேலும் வேலைவாய்ப்பு, குறைந்த வட்டியில் கடன் வசதி, முதலீடு செய்தால் அதிக பணம் என வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இதுபோன்ற குறுஞ்செய்தி வரும்போது அதில் உள்ள லிங்கை தொட்டு பார்க்க வேண்டாம்.

கடன் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அந்த செயலியில் கடன் கொடுத்த பின் அவர்களது செல்போனில் உள்ள தகவல்கள் திருடப்பட்டு மிரட்டி பணம் பறிக்கின்றனர். எனவே இது போன்ற சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 1930 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

15 வழக்குகள் பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முகநூலில் பெண்கள் பெயரில் போலியான கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்துள்ளோம். ஆன்லைன் மோசடியில் பணம் பறிபோனது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்து பணப்பரிவர்த்தனை நிறுத்தப்படும்.

மேலும் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி அந்த பணத்தின் மூலம் வேறு வங்கிக்கு அல்லது ஆன்லைனில் பொருட்கள் கொள்முதல் செய்திருந்தால் உடனடியாக அந்த பரிவர்த்தனையை நிறுத்தி பணத்தை மீட்க முடியும். இதில் ரூ.1 கோடியே 91 லட்சத்து 98 ஆயிரம் வரை மீட்டு உரியவர்களிடம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விழிப்புணர்வு வீடியோ

ஆன்லைனில் பணம் இழந்து வீட்டீர்களா?. ஓ.டி.பி. மூலம் மோசடியா?, கடன் செயலி மூலம் மோசடியா?, கிரெடிக் கார்டு மோசடியா?, மின்னணு வணிக தளங்கள் மூலம் மோசடியா?, பதற்றம் வேண்டாம், 1930 எண்ணை அழையுங்கள் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் செய்யலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இணையவழி குற்ற விழிப்புணர்வு வீடியோவை தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவினர் வெளியிட்டு உள்ளனர். இது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கல்வி உதவித்தொகை தருவதாக மோசடி

சமீபத்தில் பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியான நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் செல்போன் எண் விவரங்களை மர்மகும்பல் சேகரித்து வைத்து நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அதாவது மாணவ-மாணவிகளுக்கு தாங்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் உங்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதாகவும், அதற்கு முன்கூட்டி குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் எனவும் கூறுகின்றனர். இதனை நம்பி ஒரு சிலர் பணம் செலுத்தி வருகின்றனர். அவர்களிடம் அந்த பணத்தை பெற்று மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடியில் சிக்காமல் மாணவ-மாணவிகள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்