ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-07-30 18:18 GMT

முந்திரி சாகுபடி

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவரங்குளம், கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில், அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மானாவாரி மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் விவசாயிகள் முந்திரி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முந்திரி மகசூல் தரக்கூடியது. மாசி மாதம் பூக்கத்தொடங்கி பங்குனியில் காய்க்க ஆரம்பித்து சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் வரை முந்திரிக்கொட்டை விளைச்சல் கிடைக்கும். பூக்கும் தருணமான மாசி மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரை பருவத்திற்கு மழை பெய்யவில்லை என்றாலோ, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மகசூல் குறைவதுடன் விளைந்த முந்திரிக்கொட்டைக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாடுகளுக்கு முந்திரியை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

முனிக்கருகல் நோய்

குப்பையன்பட்டியை சேர்ந்த நடராஜன்:- ஆண்டுதோறும் முந்திரி பூ பூக்கத்தொடங்கும் தருணத்தில் தேயிலைக்கொசு தாக்கத்தால் முந்திரிகளில் முனிக்கருகல் நோய் ஏற்பட்டு பூ பூக்கும் தன்மை குறையும். இதேபோல் பூக்கும் நேரத்தில் மழை பெய்யாததால் பூக்கள் கருகுவது, தண்டு துளைப்பான் உள்ளிட்ட பூச்சி தாக்குதலால் முந்திரி பட்டுப்போவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விளைச்சல் குறைகிறது. மானாவாரி முறையில் முந்திரி சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு 3 மூட்டைகள் முந்திரிக்கொட்டை விளைந்த நிலையில் இந்தாண்டு 2 மூட்டைகள் கூட விளையாமல் மகசூல் குறைந்துவிட்டது.

புவிசார் குறியீடு கிடைக்குமா?

ஆதனக்கோட்டையை சேர்ந்த முத்துக்கண்ணு:- ஆதனக்கோட்டையில் முந்திரிதொழிலில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் முந்திரிக்கொட்டையை எவ்வித எந்திரமும் இன்றி மண்சட்டியில் தீ மூட்டி வறுத்து எண்ணெய் நீக்கி கைகளால் உடைத்து தோலுரித்து விற்பனை செய்வதால் பருப்பின் சுவை அதிகமாக உள்ளது. இதனால் ஆதனக்கோட்டை முந்திரிப்பருப்புக்கு சந்தையில் தனி மவுசுதான் என்றாலும் எங்களுடைய முந்திரிப்பருப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. ஆதனக்கோட்டை முந்திரிப்பருப்புக்கு மத்திய, மாநில அரசுகள் புவிசார் குறியீடு பெற்றுத்தந்தால் வெளிநாடுகளில் ஆதனக்கோட்டை முந்திரிபருப்புக்கு என தனி வரவேற்பு கிடைக்கும். இதனால் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைப்பதோடு பருப்புக்கான தேவையும் அதிகரிக்கும். இதனால் முந்திரி பருப்புக்கான விலையும் உயரும். இதனால் விவசாயிகளுடைய முந்திரிக்கொட்டைக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது உள்ளூர் சந்தையை பொறுத்தே விலை நிர்ணயிக்கப்படுவதால் முந்திரி பருப்பு கிலோ ஒன்றுக்கு அதன் தரத்திற்கேற்ப ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்கிறோம். ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு வழங்கி அரசே கொள்முதல் செய்து முந்திரிபருப்பு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் பருப்பின் விலை உயர்ந்து முந்திரிக்கொட்டையின் விலையும் உயரும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

கஜா புயல்

கருப்புடையான்பட்டியை சேர்ந்த தர்மராஜ்:- கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயல் காரணமாக 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெரிய முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்ததால் பெரிய அளவிலான இழப்பை சந்தித்தோம். மழை பொய்த்து விட்டதால் மானாவாரி முறையில் முந்திரி சாகுபடி செய்வது மிகக்கடினமாக உள்ளது. இதனால் முந்திரி மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் மகசூலும் குறைகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மூட்டை முந்திரிக்கொட்டை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்தாண்டு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையும், இந்த ஆண்டு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7,500-க்கு விற்பனையாகிறது. விளைச்சலும் குறைந்து, விலையும் குறைந்து வருவதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். வியாபாரிகள் முந்திரிக்கொட்டையை 2 மாதம் முதல் 3 மாதங்கள் வரை தவணையில் கடனாக எடுத்துக்கொண்டு பணம் தருவதாக கூறுகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே போகும்போது முந்திரிக்கொட்டை மட்டும் விலை குறைந்து கொண்டே போவதால் விளைந்த முந்திரிக்கொட்டையை வைத்திருக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டுமே என்ற கவலையோடு என்னை போன்ற முந்திரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் முந்திரிக்கொட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் முந்திரிக்கொட்டைக்கு விலை குறைவாக உள்ளது. இன்றைய சூழலில் உழவு செய்வது, முள்செடிகள் வெட்டுவது, பூச்சிமருந்து தெளிப்பது, முந்திரிக்கொட்டை எடுப்பதற்கு ஆட்கள் செலவு உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்ததற்கு ஒரு மூட்டை முந்திரிக்கொட்டை ரூ.15 ஆயிரத்திற்கு விற்றால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் முந்திரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முந்திரிக்கொட்டைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதோடு, முந்திரிக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர வேண்டும்.

அங்கன்வாடிகளில் விற்பனை

ஆதனக்ேகாட்டையை சேர்ந்த கீதா:- புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, கறம்பக்குடி, திருவரங்குளம், குன்றாண்டார்கோவில் ஆகிய ஊர்களை சுற்றியுள்ள முந்திரி விவசாயிகளிடம் இருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் முந்திரிகொட்டையை வாங்கி வந்து உடைந்து தோலுரித்து சாலையோரக்கடையில் விற்பனை செய்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முந்திரி பருப்பை அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர். எங்களது கடையில் விற்பனை செய்தது போக புதுக்கோட்டை, தஞ்சாவூர், கந்தர்வகோட்டை, திருச்சி, பட்டுக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மளிகை கடைகளில் முந்திரி பருப்பை விற்பனைக்காக கொடுக்கிறோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு விற்பனை நடைபெறுவதில்லை. எனவே ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் முந்திரி பருப்பு வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் இருந்து தமிழக அரசு முந்திரி பருப்பினை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், உள்ளூர் கூட்டுறவு அங்கன்வாடிகளில் விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுத்தால் முந்திரி பருப்பு விற்பனை அதிகரிப்பதோடு கூடுதலான விலை கிடைக்கும். இதனால் விவசாயிகள் விளைய வைத்துள்ள முந்திரிக்கொட்டைக்கு உரிய விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்