கோவில்களில் வழங்கும் அன்னதானம் மனநிறைவாக இருக்கிறதா?
‘தானத்தில் சிறந்தது அன்னதானம்’, ‘போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே’, உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப்பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கோவில்களில் அன்னதானம்
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை ெபற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபர்களுக்கும், அதிகபட்சம் 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நாள் முழுவதும் உணவு
தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் அன்னதான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?. சாப்பிடும் பக்தர்களுக்கு மனநிறைவு கிடைக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக கோவில்களில் சென்று பார்த்த போது சாப்பாடு நிறைவாக இருக்கிறது, இடநெருக்கடியை போக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான நந்தகுமார் கூறும்போது, இக்கோவிலில் அன்னதானம் தினமும் 100 பேருக்கு வழங்கப்படுகிறது. வெளிபகுதியில் இருந்து வரும் பக்தர்கள் பயனடையும் வகையில் தினமும் மதியம் 12.15 மணியளவில் சாமிக்கு பூஜை முடிந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் போது அவர்கள் திருப்தியாக சாப்பிட்டு செல்லும் வகையில் தயார் செய்யப்படுகிறது. இதில் சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொறியல், ஊறுகாய் உள்ளிட்ட அனைத்தும் தினமும் பக்தர்களுக்கு பரிமாறப்பட்டு வருகிறது. பெருமாள் கோவில் என்பதால் சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கூடுதலாக வழங்கப்படுகிறது
இதனால் அவர்களுக்கு சிறப்பாக உணவு அளிக்கும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அப்பளம், வடை, பாயாசம் உள்ளிட்டவைகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும் சனிக்கிழமைகளில் 300 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு அன்னதானம் சாப்பிட வருபவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு உணவு அருந்திவிட்டு செல்கின்றனர். கோவில்களில் அன்னதானம் வழங்குவது பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர் சாமிநாதன் கூறும்போது, அன்னதானம் சாப்பாடு நல்ல முறையில் இருக்கிறது. சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல் உள்ளிட்டவைகள் பரிமாறுகிறார்கள். அன்னதான சாப்பாட்டை பொறுத்தவரை எந்தவித குறைவும் இல்லை. பக்தர்களுக்கு போதுமான அளவு வழங்குகிறார்கள். அன்னதான உணவு திருப்திகாரமாக உள்ளது. கோவில்களில் அன்னதானம் வழங்குவது பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
குறைகள் இல்லை
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர் கிருஷ்ணம்மாள் கூறும்போது, சாப்பாட்டில் எந்தவிதமான குறைகள் இல்லை. சுத்தமாக இருக்கிறது. பக்தர்களுக்கு நல்லமுறையில் உபசரித்து சாப்பாடு பரிமாறுகிறார்கள். சாமி தரிசனம் செய்து விட்டு வரும்போது அன்னதானம் சாப்பிட்டு செல்வது திருப்திகரமாக இருக்கிறது.
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர் மயில் கூறும்போது, அன்னதான சாப்பாடு நன்றாக உள்ளது. மனதிற்கு நிறைவாக உள்ளது. கூட்டு, பொறியல் என 2 காய்கறிகள், ஊறுகாய் பரிமாறுகிறார்கள். எந்தவிதமான குறையும் இல்லை. இடமும் தூய்மையாக இருந்தது. குடிநீரும் நன்றாக இருந்தது.
முழு திருப்தி
அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவிலில் அன்னதானம் வழங்கிய உபயதாரர் சேலம் பகுதியைச் சேர்ந்த மாசிமலை கூறுகையில், எனது மகனின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நான் நேற்று ரத்தினகிரீசுவரர் கோவிலில் அன்னதானம் வழங்க பணம் செலுத்தி இருந்தேன். முதலாம் ஆண்டு நினைவு நாளிற்கும் நான் அன்னதானம் வழங்க பணம் செலுத்தினேன். நான் நேற்று நேரடியாக இந்த கோவிலுக்கு வந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினேன். சிறந்த முறையில் சமையல் செய்யப்பட்ட உணவுகள் அன்னதானத்தில் வழங்கப்படுகிறது. ஏதேனும் இனிப்பு வகைகள் செய்வதற்கு நாம் விருப்பம் தெரிவித்தாலும் பாயாசம் போன்ற இனிப்புகளை அவர்கள் செய்து கொடுக்கின்றனர். தினந்தோறும் சுமார் 50 பேர் இந்த அன்னதானத்தால் பயன்பெறுகின்றனர். இந்த அன்னதானத்தில் உணவு வழங்குவதில் எனக்கு முழு திருப்தி உள்ளது என்றார்.
ஒரு நாளைக்கு ரூ.1,750
அன்னதானத்திட்டம் குறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், குளித்தலையில் உள்ள கடம்பவனேசுவரர் மற்றும் அய்யர்மலையில் உள்ள ரத்தினகிரீசுவரர் ஆகிய கோவில்களில் கடந்த 2006-ம் ஆண்டு இந்த அன்னதானத்திட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை நடந்து வருகிறது. அதுபோல குளித்தலையில் உள்ள பேராளகுந்தாளம்மன் மற்றும் அய்யர்மலை அருகே சிவாலயத்தில் உள்ள சிவபுரீசுவரர் ஆகிய கோவில்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கோவில்களில் தினசரி 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு நாளைக்கு ரூ.ஆயிரத்து 750 செலவிடப்படுகிறது. சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியியல் வகைகள், ஊறுகாய் போன்றவை பொதுமக்களுக்கு அன்னதானத்தில் பரிமாறப்படுகிறது. திருமண நாள், பிறந்தநாள், நினைவு நாள் போன்ற நாட்களில் அன்னதானம் வழங்க உபயதாரர்கள் வழங்கும் தொகை, அன்னதான உண்டியலில் இருந்து கிடைக்கும் தொகை ஆகியவற்றை கொண்டு இந்த அன்னதானத் திட்டம் தினசரி நடந்து வருகிறது.
வட்டியை கொண்டு...
வருவாய் குறைவான கோவில்களில் அன்னதானத் திட்டத்திற்கு உரிய தொகை செலவிட முடியாத நிலையில் துறை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை செலவின தொகை குறித்து தெரியப்படுத்தி அத்துறை மூலம் உரிய நிதியைப் பெற்று அன்னதானத் திட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் கட்டளை நிதி மூலமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது உபயோதாரர் ஒருவர் ரூ.25 ஆயிரம் ஒருமுறை செலுத்தி விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவர் குறிப்பிட்டு கூறும் ஒரு நாளில் அவரது உபயத்தின் பேரில் அன்று அன்னதானம் வழங்கப்படும். அவர் அளிக்கும் தொகை வங்கியில் செலுத்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கொண்டு அன்று செலவிடப்படும் என்றனர்.
12 மணிக்கு சிறப்பு பூஜை
நொய்யலில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்த கோவில்களின் அன்னதானத் திட்டம் இக்கோவிலில் அரசு அறிவித்த நாள் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டத்தில் தினமும் பங்கு பெற்று சாப்பிட்டு வரும் சாமியார் பழனியப்பன் கூறுகையில், தமிழக அரசு கோவில்களில் அன்னதானத் திட்டத்தை துவக்கிய நாள் முதல் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் சார்பில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த பூஜைகள் நடைபெற்று முடிந்த பிறகு சுமார் 30 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏழைகளுக்கு உதவுகிறது
எங்களுக்கு டேபிள், சேர் போடப்பட்டு தளவாழை இலையில் சாப்பாடு பரிமாறப்படுகிறது. தினமும் ஒரு பொரியல், சாம்பார், ரசம், சாப்பாடு ஆகியவை தரமானதாக இங்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் மட்டுமே சாப்பாடு கிடைக்கும். கால தாமதமாக சாப்பாடு சாப்பிடுவதற்கு சென்றால் முன்னாள் வருகிற 30 பேருக்கு மட்டும் சாப்பாடு வழங்கப்படுகிறது.
ஆதலால் நான் இந்த அன்னதானத்தையும், ஊர் பகுதியில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டும் பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்த அன்னதானத் திட்டம் எங்களை போன்ற ஏழைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. தரமான சாப்பாடு இக்கோவில் சார்பில் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.