ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?
ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் கருத்துகள் தெரிவித்தனர்.
ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, படிப்பு முதல் வேலை வரை, எங்கும், எதற்கும், எதிலும் ஆதார்? என்ற நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டு வருகிறது.
ஆதார் அறிமுகம்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை மத்திய அரசுக்கு உணர்த்தியது. அப்போதுதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கை விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்துக்கு உதித்தது.
அதற்காக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது. 140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இதுவரையில் 131 கோடி பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது.
எதிர்ப்புக் கிளம்பியது
தனி நபர் அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் ஆனாலும் நாளடைவில் மத்திய அரசின் மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கும் அது அவசியம் என்று ஆணைகள் வந்தன.
ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முக்கிய விவாத பொருளாகவும் மாறியது. நீதிமன்றங்கள் வரை வழக்குகளும் சென்றன. இறுதியில் ஆதாரே வென்றது.
அதையடுத்து வருமான வரி செலுத்துவதற்கான பான் எண் (நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை, வருங்கால வைப்பு நிதி எண் போன்ற அனைத்திலும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டது.
ஆயுதமானது
வங்கிகள் மூலம் சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆனவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 445 கோடி மானியத் தொகை மிச்சம் ஆனது.
ரெயிலில் 'டிக்கெட்' முன்பதிவு செய்ய தனி நபருக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கிலும் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆனவுடன் போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டன. இது போன்று மத்திய அரசின் மானியங்கள், திட்டங்களில் முறைகேடுகளை ஒழித்துக்கட்டும் ஆயுதமாக ஆதார் மாறியது.
தமிழ்நாட்டில் கட்டாயம்
தமிழகத்தைப் பொறுத்த அளவில் முதலில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் 1 கோடி ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில், திட்ட பயனாளிகளின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரியாக செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாள பதிவை மேற்கொள்ளலாம் அல்லது ஆதார் ஓ.டி.பி.முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்' என்ற அறிவிப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வருகிற ஜனவரி 14-ந் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அரசு நலத்திட்டங்கள், மானியங்கள் பெற ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் கருத்துகள் தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
வரவேற்கலாம்
கருத்தப்பாண்டி (ஆட்டோ டிரைவர், கோடாங்கிபட்டி) :- அரசு திட்டங்களில் பயன்பெறவும், சலுகைகள் பெறவும் ஆதார் கட்டாயம் என்பதை வரவேற்கலாம். இதன் மூலம் அரசு நிதி சரியான முறையில், சரியான பயனாளிகளை சென்றடையும். ஒரே நபர் விதிகளை மீறி பல்வேறு திட்டங்களில் பயன்பெறுவதை தடுக்க முடியும். அதே நேரத்தில், ஆதார் இல்லை என்பதை காரணம் காட்டில் தற்போது பயன்பெற்று வரும் பயனாளிகளின் நலத்திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. ஆதார் அட்டை வைத்துள்ள முதியவர்கள், மூதாட்டிகளில் பலரும் ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அரசின் பிற திட்டங்களில் பயன்பெறவும் அதுபோன்ற சூழ்நிலை வராத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பாண்டிமணி (வக்கீல், டொம்புச்சேரி) :- ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைத்த போதிலும், ரேஷன் கடையில் கைரேகை பதிவு சரியாக விழவில்லை என்றால் மீண்டும் முயற்சிக்க முதியவர்கள் காத்திருக்கின்றனர். மீண்டும் முயற்சித்தும் பலன் கிடைக்காவிட்டால் வீட்டில் இருந்து யாரையாவது அழைத்து வருமாறு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இது மக்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்பதால் இதுபோன்ற பாதிப்புகள் எதுவும் மற்ற திட்டங்களுக்கும் ஏற்படாத வகையில் செயல்படுத்த வேண்டும். தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம். இருந்தாலும் அரசின் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு பயனுள்ளதாக மட்டுமே இருக்க வேண்டும். அவர்களை அச்சப்படுத்தவோ, பாதிப்பு ஏற்படுத்தவோ கூடாது. இந்த ஆதார் எண் கட்டாயம் ஏன் என்பதற்கான விளக்கத்தை விழிப்புணர்வாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு விலக்கு
கங்காதரன் (கூலித்தொழிலாளி, கம்பம்) :- ஆதார் அட்டை எடுக்கும் போது அதில் பலருக்கும் பிழைகள் ஏற்பட்டன. பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றில் பிழைகள் ஏற்பட்டதால் அதை சரி செய்ய மக்கள் சிரமம் அடைந்தனர். தற்போதும் ஆதார் எண்ணுடன் செல்போன் எண் இணைக்காதவர்கள், பழைய செல்போன் எண்ணை தவற விட்டு திரும்ப பெற முடியாதவர்கள் என பலரும் ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கும் தனியாக செலவு செய்ய வேண்டியது உள்ளது. எனவே, ஆதாரில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்கு இலவசமாக சிறப்பு முகாம்களை கிராமங்கள் தோறும் நடத்த வேண்டும். ஆதார் இருந்தால் மட்டுமே அரசு திட்டங்களில் பயன்பெற முடியும் என்பது, மற்ற சான்றிதழ்களின் முக்கியத்துவத்தை குறைப்பதாக இருக்கிறது. அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்பதற்கு பதில் முறைகேடுகள் நடக்கக்கூடிய திட்டங்களில் முதலில் கட்டாயமாக்கிவிட்டு, படிப்படியாக பிற திட்டங்களுக்கும் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
பாப்பாத்தி (குடும்பத்தலைவி, உப்புக்கோட்டை) :- வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்ததால், படிக்காத மக்கள் ஆதார் எண்ணை வைத்து பணம் பெறவும், உதவித்தொகை பெறவும் சிரமம் அடைகின்றனர். கைரேகை சரியாக பதிவாகவில்லை என்று உதவித்தொகை பெற முடியாத நிலைமையும் உள்ளது. தற்போது அனைத்து நலத்திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் எண் கட்டாயம் என்று கொண்டு வருவதால் அவற்றால் முதியவர்கள் பயன்பெறுவதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில், தற்போது நலத்திட்டம் பெற்று பயனடையும் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சிரமம் இன்றி அதுகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், செல்போன் மாற்றம் போன்றவைகளுக்காக மக்கள் அலைகழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
அதே போன்று வாக்காளர் அடையாள அட்டை எண், நலத்திட்டங்களுக்கு என்று தனித்தனியாக ஆதார் இணைப்பை செயல்படுத்தாமல் அதனை ஒரே குடையின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.