தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?

தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் 5 ள்கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

Update: 2023-10-17 18:45 GMT

தக்கலை அருகே உள்ள கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சரல்விளை, கோல்டன் நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளை வேளிமலை அடிவாரத்தில் உள்ள புலிவிளை பொற்றை பகுதியில் மேச்சலுக்காக கொண்டு செல்வது உண்டு. அவ்வாறு காலையில் மேச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மாலையில் வீட்டிற்கு அழைத்து வரும்போது பலருடைய ஆடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது.

இவ்வாறு கடந்த 6 மாதங்களில் அந்த பகுதியை சேர்ந்த ராஜன், ராமையா, ரோஸ்மேரி, ரவி, நடேசன் ஆகியோரது 20 -க்கும் மேற்பட்ட ஆடுகள் மாயமாகி உள்ளது. இந்த ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி சென்றதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாமல் வீடுகளில் உள்ள கொட்டகையில் அடைத்து வைத்து உணவு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் சீலன் தலைமையில் பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக்கிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடுவதை தடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து சப்-கலெக்டரின் உத்தரவுபடி வனத்துறையினர் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்டறிய புலிவிளை பொற்றை பகுதியில் 5 கேமராக்கள் பொருத்தி உள்ளனர். இந்த கேமராக்கள் மூலம் அந்த பகுதியில் மர்ம விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்