நெற்பயிர்களை காப்பாற்ற பாசன வாய்க்காலை திறந்து விட வேண்டும்

மழையால் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறு சாகுபடி செய்த நெற் பயிர்களை காப்பாற்ற குன்னம் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-22 18:45 GMT

கொள்ளிடம்:

மழையால் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மறு சாகுபடி செய்த நெற் பயிர்களை காப்பாற்ற குன்னம் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டன் வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் ஒட்டன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் மூலம் எலத்தூர், பெரம்பூர், முத்துகிருஷ்ணாபுரம், தோப்பு தெரு, கீரங்குடி, வடரங்கம், ஆகிய பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் பயிர்களை மறு சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்கள். இவ்வாறு மறு சாகுபடி செய்த நெற்பயிர்கள் இளம் நாற்றுகளாக இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பாசன வசதி தரும் ஒட்டன் வாய்க்காலில் மணல் லாரி செல்வதற்காக சிறு குழாய் அமைத்து வாய்க்காலின் குறுக்கே மணல் வைத்து மூடப்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் 500 ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதியின்றி உள்ளது.

தண்ணீர் வரத்து குறைவு

இதுகுறித்து குன்னம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோதண்டராமன் கூறியதாவது, 'குன்னம் கிராமத்தில் ஒட்டன் பாசன வாய்க்காலை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ஒட்டன் வாய்க்கால் மூடப்பட்டு சிறு குழாய் அமைக்கப்பட்டு இருப்பதால் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம்.

எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் அந்த குழாய்களை அகற்றி வாய்க்காலை திறந்து விட வேண்டும். இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்