ஜல்ஜீவன் திட்டத்தில் திட்ட மதிப்பீடு செய்வதில் குளறுபடி

ஜல்ஜீவன் திட்டத்தில் திட்ட மதிப்பீடு செய்வதில் குளறுபடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.;

Update: 2022-12-09 19:26 GMT

தா.பழூர்:

தா.பழூர் ஒன்றிய கூட்ட மன்றத்தில் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் வரவேற்று பேசினார். ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கணக்கர் அரியதங்கம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், மஸ்தூர் பணியில் இருக்கும் நபர்கள் சரியாக பணி செய்கிறார்களா? என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாததால் ஒன்றியம் முழுவதும் உள்ள பல்வேறு மக்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறோம். பதவிக்காலத்திற்குள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இடங்கண்ணியில் இருந்து கீழக்காடு பகுதிக்கு ஒரு பாலம் அமைத்துத்தர வேண்டும். ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பணி செய்ததற்கான ஒப்பந்த தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு அலுவலர்கள் திட்ட மதிப்பீடு தயார் செய்ததில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடியே காரணம். உதாரணத்துக்கு அரசுநிலையிட்டபுரம் கிராமத்தில் மொத்தம் 8 வீடுகளே உள்ளன. ஆனால் அந்த கிராமத்திற்கு 112 குடிநீர் இணைப்பு வழங்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்ததாரர் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு வீடுகள் இல்லை. இதுபோல் பல்வேறு கிராமங்களில் இத்திட்டத்தின் கீழ் பணி செய்த ஒப்பந்ததாரர்களின் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. எனவே இப்பிரச்சினையில் ஒன்றிய நிர்வாகம் உடனடியாக சரியான தீர்வு காண வேண்டும், என்றார்.

பின்னர் ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் பேசுகையில் நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை கவுன்சிலர்களுடன் கலந்து பேசி சரி செய்யப்படும், என்றனர். கூட்டத்தில் ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) குருநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்