சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு

சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்தனர்.

Update: 2022-09-19 19:00 GMT

சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்தனர்.

கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கதவணி சமத்துவபுரத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியை சேர்ந்த சரோஜா, சந்தோஷ், ஆகியோர் தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஊத்தங்கரையை அடுத்த கதவணி சமத்துவபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 100 வீடுகள் கட்டி தரப்பட்டன. இதே பகுதியில் வசிக்கும் நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தோம். தற்போதைய கதவணி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி காந்திலிங்கத்திடம் மீண்டும் இலவச வீடு கேட்டு மனு அளித்தோம். அப்போது அவர், கடந்த, 2013-ம் ஆண்டே உங்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முறைகேடு

இதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அப்போதுதான் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதுபற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் பயனில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை வேறு நபர்களுக்கு வழங்கி உள்ளனர். எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை எங்களுக்கே பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

342 மனுக்கள்

முன்னதாக நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் சாலை, மின்சாரம், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 342 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண உத்தரவிட்டார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், உதவி ஆணையர் (ஆயம்) பாலகுரு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்