விளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு: ரூ.350 பேனருக்கு ரூ.7,906 செலவா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

ரூ. 350 செலவாகும் பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-23 08:37 GMT

சென்னை,

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இந்த சந்திப்பின் முடிவில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல்துறை முறையாக விசாரணை செய்யவில்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கி சீர்குலைந்துவிட்டதாக கவர்னரிடம் புகாரளித்தேன். கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கனியாமூர் பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறை சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் கனியாமூர் பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது.

திமுக அரசில் அனைத்துத்துறைகளிலும் முறைகேடு நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள் இல்லை. காலாவதி மருந்து விவகாரத்தில் ஐகோர்ட்டே விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டிது அரசு, ஆனால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய உள்ளாட்சி நிதியை முறையாக பயன்படுத்தவில்லை. நம்ம ஊரு சூப்பரு என்ற விளம்பர பேனர் விநியோகத்தில் முறைகேடு நடந்துள்ளது.

ரூ. 350 செலவாகும் பேனருக்கு ரூ. 7,906 செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள். தமிழகம் முழுவதும் சட்டவிரோதமான மதுபார்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்