சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ. 1 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு

மடத்துக்குளம் வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ. 1 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-08 20:49 GMT


மடத்துக்குளம் வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூ. 1 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அதிக மகசூல்

சொட்டு நீர்ப்பாசனம் என்பது பயிர்களுக்குத் தேவையான நீரை மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியிலோ நேரடியாக வழங்கும் துல்லியமான நீரப்பராமரிப்பு முறையாகும். இந்த முறையின் மூலம் குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் நீர்ப்பாசனம் மேற்கொள்ள முடியும். இதனால் 75 சதவீதம் வரை பாசன நீரை சேமிக்க முடிகிறது. பயிர் திடமாகவும், சீராகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதுடன் சரியான நேரத்தில் முதிர்ச்சி அடையவும் சொட்டுநீர்ப் பாசனம் கை கொடுக்கிறது.

மேலும் களை வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதால் களை எடுக்கும் செலவு குறைக்கப்படுகிறது. நீரில் கரையும் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்களை சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்கலாம். இந்த முறையில் சாகுபடி செலவு குறைக்கப்பட்டு மகசூல் அதிகரிக்கப்படுவதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கிறது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத் திட்டங்கள் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு விவசாயி 12.5 ஏக்கர் வரை சொட்டுநீர்ப்பாசனம் அமைத்துக் கொள்ளலாம். சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

துணை இயக்குனர் ஆய்வு

தென்னை, மக்காச்சோளம், கரும்பு, காய்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிர்களுக்கும் மானியத் திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மடத்துக்குளம் வட்டாரத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர்ப் பாசனம் வழங்க ரூ.1 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டு பழுதடைந்துள்ள சொட்டுநீர்ப் பாசன அமைப்பை புதுப்பித்தல் போன்றவற்றில் விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமமான துங்காவியில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர்ப் பாசனத் திடலில் திருப்பூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுருளியப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்