தென்மாவட்டத்தில் 5 மாதங்களில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்ட 917 பேர் கைது- தென்மண்டல ஐ.ஜி. தகவல்

தென் மண்டல காவல்துறைக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 917 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-25 21:14 GMT


தென் மண்டல காவல்துறைக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 917 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஞ்சா கடத்தல்

கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் "சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் ஜூன் 26-ந்தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தென் மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 5 மாதத்தில் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் நெல்லை மாநகரில் 469 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய 917 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது நடவடிக்கை, கஞ்சா பறிமுதல் என்பதோடு மட்டுமல்லாமல், கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 13 முக்கியமான கஞ்சா வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் மற்றும் அசையும் சொத்துக்களும் காவல்துறையால் முடக்கப்பட்டுள்ளன.

வங்கி கணக்குகள் முடக்கம்

கடந்த ஓராண்டில் தென் மண்டலத்தில் 1,316 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் 2,448 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையின்படி, கடந்த 5 மாதத்தில் தென் மண்டலத்தில் 814 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. மேலும், தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 71 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக வேறு மாநிலங்களில் இருந்து கஞ்சா கொண்டு வருவதைத் தடுக்கும் வகையில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் 3,200 கஞ்சா வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 684 கஞ்சா வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக கஞ்சா வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள குற்றவாளிகள் பிணையில் செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பல வழக்குகளில் குற்றவாளிகள் பிணையில் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளனர். சமூகத்தின் மிகப்பெரிய சீர்கேடாக விளங்கும் கஞ்சா, இளைஞர்களின் உடல்நலத்தை கெடுத்து, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதை தடுக்கும் வகையில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்