முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6.60 லட்சம் கோடி முதலீடு: 14.54 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்தின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
உலக முதலீட்டாளர் மாநாட்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது கூறியதாவது:-
உலகமே வியக்கும் வண்ணம் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் டி.ஆர்.பி ராஜா. இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடு கிடைக்கப்பெற உள்ளன. உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடு கிடைத்துள்ளது.
இந்த புதிய முதலீடுகள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும். சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மகத்துவம் என்றென்றும் பேசப்படும். இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்தின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. முதலீடுகள் தொடர்ந்து செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்" என்றார்.