கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் விசாரணை

புதுக்கோட்டையில் ரவுடி கொலை சம்பவத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2022-12-13 18:32 GMT

ரவுடி கொலை சம்பவம்

திருச்சி மேலக்கல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. புதுக்கோட்டையில் சந்தை பேட்டையில் ரவுடி பட்டுக்குமார் என்பவர் கொலை வழக்கில் கைதான இளவரசன், கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இதில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு கைதான வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார்.

இதில் புதுக்கோட்டை கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் அவர் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோர்ட்டில் கையெழுத்திட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் புதுக்குளம் அருகே நண்பர்கள் 3 பேருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இளவரசனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

பழிக்குப்பழியாக?

இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை வழக்குகளில் தொடர்புடைய இளவரசனை பழிக்கு பழியாக யாரேனும் வெட்டி கொலை செய்தார்களா? என்பது உள்பட வெவ்வேறு கோணங்களில் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடம் அருகே உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரிக்கின்றனர். இதேபோல செல்போன் டவர் சிக்னல் மூலம் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் இவர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் பற்றியும் விசாரிக்கின்றனர். கொலையாளிகளை தேடி திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்பட வெளியூர்களுக்கும் போலீசார் சென்றுள்ளனர். கொலையாளிகள் கூலிப்படையாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

உடல் ஒப்படைப்பு

இந்த கொலை சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலையான இளவரசனின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி பிரேத பரிசோதனை கூடத்தில் நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதன்பின் அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இளவரசன் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று திருச்சி கொண்டு சென்றனர். புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்