எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டம் அறிமுகம்- முதன்மைக்கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

மாவட்டத்தில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-05 00:44 GMT

மாவட்டத்தில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி திட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவுரைப்படி மதுரை திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.

அதையடுத்து, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. அத்துடன், பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி வளாகத்திலும், வகுப்பறையிலும் சுத்தம், சுகாதாரத்தை பேணுவதற்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த உறுதி மொழியை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் திங்கட்கிழமை தோறும் இறைவணக்க கூட்டத்தில் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்.

மேற்பார்வை

திட்டத்தின் செயல்பாடுகள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்டக்குழு, 15 வட்டாரங்களில் வட்டாரக்குழு, பள்ளி அளவிலான குழு, 5 மாணவ, மாணவிகளை கொண்ட உபகுழு ஆகியவற்றின் மூலம் மேற்பார்வை செய்யப்படும். திட்டத்தில், தூய்மையான குடிநீர் வசதி, தூய்மையான கழிப்பறைகள், தன் சுத்தம், வகுப்பறை சுத்தம், பள்ளி வளாக சுத்தம், கழிவு மேலாண்மை, பள்ளி காய்கறித்தோட்டம், மரம் நடுதல், கழிவுகள் மறுசுழற்சி, பிளாஸ்டிக் இல்லாத வளாகம் ஆகிய செயல்பாடுகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை செயல்படுத்தப்படும்.

விருது

இந்த பணிகளை மேற்கொள்வதில் சிறப்பாக செயல்படும் பள்ளிகள் மாவட்ட அளவில் கண்டறியப்பட்டு, சிறந்த தூய்மை பள்ளி விருது, சிறந்த பசுமை வழிகாட்டி ஆசிரியர் விருது, சிறந்த பசுமை நட்சத்திர மாணவர் விருது, சிறந்த சூற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கப்படும். நிகழ்ச்சியில், மதுரை கல்வி மாவட்ட அலுவலர் முத்துலட்சுமி, உதவி திட்ட அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்