நெல்லை பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
நெல்லை பல்கலைக்கழகத்தில் 5 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது என்று துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 54-வது கல்விசார் நிலைக்குழு கூட்டம் நடந்தது. துணைவேந்தர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பதிவாளர் சாக்ரடீஸ் முன்னிலை வகித்தார். பல்கலைக்கழக நிலைக்குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதம் நடத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பின்னர் துணைவேந்தர் சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 2 முதுகலை பாடத்திட்டங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை எம்.ஏ. தொல்லியல் பாடம் மற்றும் எம்.எஸ்சி. அப்ளைட் பிசிக்ஸ் ஆகியவை ஆகும். எம்.ஏ. தொல்லியல் துறை பாடமானது இந்திய தொல்லியல் ஆய்வு துறையுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
இதுபோல் இளங்கலை பாடப்பிரிவில் இந்த ஆண்டு 3 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பி.எஸ்சி. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், சைபர் கிரைம் ஆகிய மூன்று பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
உயர்கல்வி ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக கடல்சார் உயிரின மையத்தில் ரிசர்ச் பார்க் என்ற திட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக சுமார் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 1,500 சதுர அடி கொண்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 50 வகையிலான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 900 மாணவர்களுக்கு நேரடியாக பட்டம் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.