கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டல்:2 பா.ஜனதா நிர்வாகிகள் கைது

சாத்தான்குளம் அருகே கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய வழக்கில் 2 பா.ஜனதா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-17 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய 2 பா.ஜனதா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

நன்கொடை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிரஷர் ஆலை உள்ளது. இந்த ஆலை மேலாளர் நவீன்குமார் சாத்தான்குளம் போலீசில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இடைச்சிவிளை ஆனந்தவிளையைச் சேர்ந்த பா.ஜனதா மாநில இளைஞரணி செயலாளர் பூபதிபாண்டியன் (வயது 36), திருச்செந்தூரை சேர்ந்த மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சரண் என்ற ஜெயஆனந்த் (27) ஆகியோர் 2 கார்களில் எங்களது ஆலைக்கு வந்து நன்கொடை கேட்டனர்.

அப்போது நான், ஆலை உரிமையாளர் வெளியே சென்று இருப்பதாகவும், அவர் வந்த பிறகு நன்கொடை வாங்கி செல்லுமாறும் கூறினேன்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த பூபதிபாண்டியன், ஜெயஆனந்த் இருவரும் ஆலையின் நுழைவுவாயிலில் தங்களது கார்களை நிறுத்தி, ஆலைக்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, பூபதிபாண்டியன், ஜெயஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புகார்

இதற்கிடையே, பூபதி பாண்டியன், ஜெயஆனந்த் ஆகியோர் தரப்பிலும் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அதில், தாங்கள் காரில் சென்றபோது, கிரஷர் ஆலையில் இருந்து வந்த லாரியில் இருந்து கீழே விழுந்த கல் கார் மீது விழுந்ததாகவும், இதனால் கார் சேதம் அடைந்ததாகவும், அதற்கான பணத்தை கேட்க சென்றபோது தகராறு ஏற்பட்டதாகவும் கூறி உள்ளனர்.

இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்