விளையாட்டுத்துறையை மேம்படுத்த 31 அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
விளையாட்டுத்துறையை மேம்படுத்த சட்டசபையில் அறிவித்தபடி 31 அறிவிப்புகள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.;
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை 8 மணியளவில் விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு திடீரென சென்று அங்கு மாணவ- மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது காலை சிற்றுண்டி திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை பார்வையிட்ட அவர், உணவின் தரம், ருசி குறித்தும் ஆய்வு செய்ததோடு மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
பின்னர் அப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி மையத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை பார்வையிட்டார்.
மாணவர்களிடம் கேட்டறிந்தார்
இதனை தொடர்ந்து, விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று, காலை சிற்றுண்டி திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அப்போது அங்கு காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவ- மாணவிகளிடம் உணவு எப்படி உள்ளது? என்றும், ருசியாக இருக்கிறதா? என்றும் கேட்டறிந்தார்.
அதன் பிறகு அப்பள்ளியில் மாணவர்களின் வருகைப்பதிவேட்டை வாங்கி பார்வையிட்டு எத்தனை மாணவர்கள் உள்ளனர்? என தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர் அங்கிருந்த ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்படும்
பேரூராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். விக்கிரவாண்டியில் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். விளையாட்டுத்துறையை மேம்படுத்த 31 அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.