"100 நாள் வேலை திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல நடவடிக்கை"-அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

“100 நாள் வேலை திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Update: 2023-03-13 21:57 GMT

அம்பை:

"100 நாள் வேலை திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அமைச்சர் ஆய்வு

அம்பை யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். யூனியனில் அரசு சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்கள், ஊரக வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட திட்ட பணிகளின் நிலைப்பாடுகளையும், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், யூனியன் சேர்மன் பரணி சேகர், யூனியன் ஆணையாளர்கள் ராஜம், ஸ்ரீகாந்த், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஞானக்கனி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுடலைமுத்து, ஆகாஷ், மாரியம்மாள், கஸ்தூரி, சரஸ்வதி, இசக்கியம்மாள், ராமலட்சுமி, பஞ்சாயத்து தலைவர்கள் மன்னார்கோவில் ஜோதி கல்பனா பூதத்தான், வெள்ளாங்குளி முருகன், துணைத் தலைவர் ராஜேஷ், பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம் சங்கர், அயன் சிங்கம்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத்தலைவர் சுடலைஅரசன், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், வாகைக்குளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலட்சுமி நந்தகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தென்காசி

முன்னதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தென்காசி யூனியன் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தென்காசி யூனியனுக்கு உட்பட்ட சுமைதீர்ந்தபுரம், குத்துக்கல்வலசை உள்ளிட்ட 10 பஞ்சாயத்துகளுக்கு குப்பை அள்ளும் டிராக்டர்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்காசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகளில் ஓராண்டுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

100 நாள் வேலை திட்டம்

தமிழகத்தில் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நல்ல காற்றோட்டம் உள்ள வராண்டாக்கள் மற்றும் பிரமாண்டமான கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

மேலும் 100 நாள் வேலை திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்காசியை பொறுத்தவரை 14 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் அனைத்தும் நகரங்களின் அருகிலேயே உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடைபெறுகிறது. குறிப்பாக சாலை வசதி எவ்வாறு உள்ளது? எங்கு என்ன தேவை? என்பது குறித்தும் பார்வையிட்டு அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றி வருகிறோம்.

தரமான சாலைகள்

காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படுகிறது. இதுதவிர மாவட்ட கலெக்டர் நிரப்பக்கூடிய இடங்களை உரிய முறையில் அவர் நிரப்புவார். முதல்வர் கிராமப்புற சாலை திட்டங்களுக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான சாலைகள் போடப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

கடையநல்லூர்

கடையநல்லூர் அருகே புன்னையாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.84.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கூடுதல் வகுப்பறை கட்டிடத்துக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனையும் அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்