ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்வதில் தவறு இல்லை சேலத்தில், கே.எஸ்.அழகிரி பேட்டி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்வதில் தவறு இல்லை என்று சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2022-06-24 21:12 GMT

சேலம், 

ஆர்ப்பாட்டம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அக்னிபத் என்ற கொடுமையான திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இதன்மூலம் 4 ஆண்டுகள் ராணுவத்தில் வேலை என்று இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடும் திட்டத்தை திணித்து இருக்கிறது. 4 ஆண்டு ஆயுத பயிற்சியை கொடுத்து பிறகு அவர்களை ஆயுதம் தாங்கிய படையாக வைத்துக்கொள்ள பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்து இருக்கிறது.

மேலும் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் அவர்களை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை ஆயுதம் தாங்கிய அணியிடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனநாயக குரலை நெரிக்கும் இந்த சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் அறவழியில் போராட வேண்டும். அதன்படி அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

அ.தி.மு.க. பொதுக்குழு

மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம், விவசாயம், வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படும்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஓ.பன்னீர் செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசியது போன்ற சம்பவங்கள் நடந்து இருந்தால் வருந்தத்தக்கது.

உள்கட்சி விவகாரத்தில் ஜனநாயகம் இருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இரண்டு பேரும் நல்ல நண்பர்கள். கருத்துவேறுபாடுகளை அவர்கள் நாகரீகமான முறையில் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

நளினி விடுதலை

ஒரு ஆண்டில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்த முடியுமோ அவ்வளவு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. மீதியுள்ள வாக்குறுதிகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய காங்கிரஸ் கட்சி எதிர்க்க வில்லை. அவரை விட குற்றம் புரிந்த பேரறிவாளன் விடுவிக்கப்பட்டார். நளினி பெரிய அளவில் குற்றம் புரியவில்லை. எனவே நளினியை விடுதலை செய்வதில் தவறு இல்லை.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படுபவர்களின் மரணங்களை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், வர்த்தக பிரிவு தலைவர் சுப்ரமணி, மாநகர பொதுச்செயலாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், ஷேக்இமாம், விவசாய அணி நிர்வாகி சிவகுமார், மண்டல குழு தலைவர் சாந்தமூர்த்தி, சேலம் மாவட்ட காமராஜ் அறக்கட்டளை தலைவர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்