திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விரைவில் 5 துறைகள் தொடங்கப்படும் புதிய துணைவேந்தராக பொறுப்பேற்ற ஆறுமுகம் பேட்டி
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகள் தொடங்கப்படும் என்று துணைவேந்தர் ஆறுமுகம் கூறினார்.
திருவலம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் புதிதாக 5 துறைகள் தொடங்கப்படும் என்று துணைவேந்தர் ஆறுமுகம் கூறினார்.
பொறுப்பேற்பு
சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆறுமுகம் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர் 32 ஆண்டுகள் மாணவர்களுக்கு கல்வியை போதித்தல் மற்றும் ஆராய்ச்சி பணியிலும், 11 ஆண்டுகள் நிர்வாகப்பணியிலும் பணியாற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் 32 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 22 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
பின்னர் துணைவேந்தர் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
'பி' தரத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 'ஏ' தரத்துக்கு கொண்டு வருவதே முதல் குறிக்கோள்.
5 துறைகள்
இதற்காக புதிதாக மேலும் 5 துறைகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தங்கி படிக்க, விடுதி வசதி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களுக்கு எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.ஏ. (டிபன்ஸ்), ஜர்னலிசம் போன்ற படிப்புகள் ஆரம்பிக்கப்படும். மூலிகை பயிர்கள் வளர்க்கப்பட்டு அதன் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதி மக்களுக்கு தேவையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இப்பகுதிகளில் படித்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, பல்கலைக்கழகம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதன் மூலம் அவர்களை தொழில் முனைவோர்களாகவும், வேலைக்கு செல்வதற்கு தகுதி உடையவர்களாகவும் ஆக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பல்கலைக்கழகத்தின் தரம் 'ஏ' அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் பட்சத்தில், தொலைதூர கல்வி ஆரம்பிப்பதற்கு ஏதுவாக இருக்கும். நிதியும், ஆராய்ச்சி திட்டங்களும் கிடைக்கும்.
ஊழியர்கள் பிரச்சினை
தரம் உயர்த்தப்பட்டால் பல்வேறு மாநில மாணவர்களும் இங்கு அதிகளவில் படிக்க வருவார்கள். ஊழியர்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து அரசுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) விஜயராகவன் உடனிருந்தார்.