நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது.

Update: 2024-03-10 02:35 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது. பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரம், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

விருப்ப மனுக்கள் விநியோகம் கடந்த 6ம் தேதியுடன் நிறைவடைந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கும் கால அவகாசமும் அன்றைய தினமே (6ம் தேதி) நிறைவடைந்தது. அதன்படி தேர்தலில் போட்டியிட மொத்தம் 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது. அதன்படி, எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது.

முதலில் திருவள்ளூர் (தனி), சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி), கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. இன்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் நாளை எஞ்சிய 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது. நேர்காணலுக்கு வருபவர்கள் விருப்பமனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதை கட்டாயம் கொண்டுவர வேண்டுமென அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்