சர்வதேச அளவிலான கபடி பயிற்சி பட்டறை தொடக்கம்

சர்வதேச அளவிலான கபடி பயிற்சி பட்டறை தொடங்கியது.

Update: 2023-09-29 17:53 GMT

  புன்னம் சத்திரத்தில் உள்ள சேரன் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், சேரன் உடற்கல்வியியல் கல்லூரி சார்பில் நவீன கபடி மற்றும் மேம்பாட்டு அறிவியல் சர்வதேச அளவிலான கபடி பயிற்சி பட்டறை தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு சேரன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். சேரன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். சேரன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் அமுதா வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர், அவரது மனைவி தமிழ்மணி, கல்லூரியின் தாளாளர் பாண்டியன், எகிப்து கபடி கழக உறுப்பினர் செங்ராகப் முகமது அலி, டாக்டர் ராஜேஷ்குமார் ஆகியோர் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தனர். பின்னர் எகிப்து கபடி கழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தனர். சேரன் உடற் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் மாநில, தேசிய கபடி போட்டிகளில் பங்கு பெற்று பல வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்தினார்கள்.

விழாவில் மாணவ, மாணவிகளின் பரதம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து எகிப்து நாட்டு கபடி குழுவை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும், சேரன் உடற்கல்வியியல் கல்லூரியை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் இடையில் நட்புறவு கபடி போட்டி நடைபெற்றது. இதில் சேரன் உடற்கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் கல்லூரியின் உதவி பேராசிரியை நித்யா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சேரன் உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் வெங்கடேசன், பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்