மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடக்கம்
மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது.
பட்டம் விடும் திருவிழா
சுற்றுலாத்துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்கு தமிழக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரிப்பன் வெட்டி பட்டம் விடும் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
15-ந்தேதி வரை
நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ், மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டல் மேலாளர் பிரபுதாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் மல்லை சத்யா, விசுவநாதன், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், பேரூராட்சி தலைவர்கள் யுவராஜ், தேவராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சேகர், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார், சீனிவாசன், லதாகுப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பட்டம் விடும் திருவிழா வருகிற 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பட்டம் விடும் திருவிழா தினமும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
நேற்று முதல் நாள் நிகழ்ச்சியில் விழா நடைபெறும் மாமல்லபுரம் கடற்கரை மைதானத்தில் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, இந்தோனேசியா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டவர்கள் பட்டங்களை பறக்க விட்டனர். இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் எண்ணற்ற வண்ணங்களில் 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டன.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
குறிப்பாக, இந்திய தேசிய கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ் மிக்கி மவுஸ், கிறிஸ்துமஸ் தாத்தா, சுறா மீன், திமிங்கலம், கார்ட்டூன்கள், சூப்பர்மேன், டிராகன், பாம்பு, உள்ளிட்ட வடிவங்களில் பல்வேறு நிறங்களில் பட்டங்கள் பறக்க விடப்பட்டன. இந்த பட்டம் விடும் விழாவானது சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் அமைந்திருந்தது நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் என ஏராளமானோர் கலந்து கொண்டு வானில் சிறகடித்து பறந்த பட்டங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மாலை 6 மணி வரை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையின் காரணமாக பட்டங்கள் பாதியிலேயே இறக்கப்பட்டன. இதனால் பட்டம் விடும் திருவிழாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.