மதுரை குயின் மீரா பள்ளியில் சர்வதேச செஸ் போட்டி
மதுரை குயின் மீரா பள்ளியில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
மதுரை மாவட்ட செஸ் சர்க்கிள் (தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன்) சார்பில் 2023-ம் ஆண்டிற்கான சர்வதேச தரவரிசை சதுரங்கப் போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மதுரையில் உள்ள குயின் மீரா சர்வதேச பள்ளியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
குயின் மீரா பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் தனது சிறப்புரையில் சதுரங்கம் விளையாடுவதற்கு பொறுமை மிக அவசியம். இந்த விளையாட்டுப் போட்டிக்கு வயது வரம்பு இல்லை. 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை ஒரே தளத்தில் விளையாடுவதை பார்த்தது மிக்க மகிழ்ச்சியை தந்தது என்றார்.நிறைவு விழாவில் பங்கேற்ற கிராண்ட் மாஸ்டர் மற்றும் மதுரை மாவட்ட செஸ் சர்க்கிளின் புரவலர் தீபன் சக்கரவர்த்தி பேசினார்.
முன்னதாக குயின் மீரா பள்ளியின் கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் வரவேற்றார்.
செஸ் போட்டியில் முதல் இடத்தை வென்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அபூர்வ் காம்பிளே மற்றும் யுவனேஷ், மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் முகமது தாரிக் ஆகியோருக்கு முறையே ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்ட செஸ் சர்க்கிள் செயலாளர் உமாமகேஸ்வரன், கவுரவ உறுப்பினர் பிரகதீஸ் ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டனர்.