5 ஆயிரம் பேர் பங்கேற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணி

திருவண்ணாமலையில் கொட்டும் மழையில் நடந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-26 16:17 GMT

திருவண்ணாமலையில் கொட்டும் மழையில் நடந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி விழிப்புணர்வு பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒலிம்பியாட் ஜோதி பேரணி

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற ஒலிம்பியாட் ஜோதி பேரணி திருவண்ணாமலையில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி தொடங்கும் சமயத்தில் மழை பெய்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் கொட்டும் மழையில் ஒலிம்பியாட் ஜோதியை கையில் ஏந்தியபடி 5 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று பேரணியில் பங்கேற்றார்.

பேரணி திருவண்ணாமலை பெரியார் சிலையில் தொடங்கி காந்தி சிலை, ராஜகோபுரம், கடலைக்கடை சந்திப்பு, சக்தி தியேட்டர், கிருஷ்ணா லாட்ஜ், பூதநாராயண கோவில், அறிவொளிபூங்கா வழியாக அண்ணா நுழைவு வாயில் வரை சென்று நிறைவடைந்தது.

கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு

பேரணி செல்லும் வழிநெடுகிலும் ஆங்காங்கே பறை இசை, தப்பாட்டம், பொய்கால் குதிரை, கரகாட்டம், நாதஸ்வர இசை, செண்டை மேளம், பாப்பாம்பாடி மேளம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சி வரவேற்புடன் ஒலிம்பியாட் ஜோதி பேரணி நடந்தது.

இதில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள், தூய்மை அருணை இயக்கத்தினர், வணிகர் சங்கங்கள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், பார்அசோசியேசன், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது ஒலிம்பியாட் ஜோதியை பெரியார் சிலையிலிருந்து காந்தி சிலை வரை பொதுப்பணித்துறை அமைச்சரும், காந்தி சிலையிலிருந்து ராஜகோபுரம் வரை சட்டமன்ற துணை சபாநாயகரும்,

ராஜகோபுரத்திலிருந்து கடலைக்கடை சந்திப்பு வரை எஸ்.கே.பி.பொறியயில் கல்லூரி முதல்வர் கருணாநிதியும், கடலைக்கடை சந்திப்பிலிருந்து சக்தி தியேட்டர் வரை தேசிய கைப்பந்து விளையாட்டு வீரர் மிதுன்குமாரும், சக்தி தியேட்டரிலிருந்து கிருஷ்ணா லாட்ஜ் வரை மாநில கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை கோகிலாவாணியும்,

கிருஷ்ணா லாட்ஜிலிருந்து பூதநாராயண கோவில் வரை வர்த்தக சங்கம் மற்றும் ஓட்டல் சங்க உரிமையாளர்களும், பூதநாராயண கோவிலிலிருந்து அசோக் பில்லர் வரை அரிமா சங்கம் மற்றும் தன்னார்வலர்களும், அசோக் பில்லரிலிருந்து அறிவொளி பூங்கா வரை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களும், அறிவொளி பூங்கா முதல் அண்ணாநுழைவு வாயில் வரை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினியும் ஏந்தி வந்தனர்.

பாராட்டு சான்றிதழ்

செஸ் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை தொடர்ந்து திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான வகையில் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு உலகளவில் தமிழகத்தை உற்று நோக்கும் விதமாக 187-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது குறித்து மாவட்டத்தின் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாபெரும் ஒலிம்பியாட் ஜோதி பேரணியை சிறப்பான வகையில் ஏற்பாடு செய்து நடத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் மாநில தடகளசங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் நான்சி, திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன், நகராட்சி ஆணையர் முருகேசன்,

மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஸ்ரீதரன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நிர்வாகிகள் டி.வி.எம்.நேரு, பிரியா விஜயரங்கன், துரை.வெங்கட் உள்பட நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்