30 நாடுகளின் அரங்குகளுடன் சர்வதேச புத்தக கண்காட்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
30 நாடுகளின் அரங்குகளுடன் சென்னை சர்வதேச புத்தக காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். 3 நாட்கள் இந்த கண்காட்சி நடக்கிறது.
சென்னை,
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதே வளாகத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி முதல்முறையாக இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் காகர்லா உஷா வரவேற்று பேசினார்.
இதில் ஜெர்மன் தூதர் ஜாக்குலின் ஹீதே, ஜப்பான் தூதர் டகா மசாயுகி, மலேசிய துணை தூதர் சங்கீதா பாலசந்திரா, சிங்கப்பூர் தூதர் எட்கர் பங், தாய்லாந்து தூதர் நிடிரூகே போன்பிரசர்ட், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மேலாண்மை இயக்குனர் ஆர்.கஜலட்சுமி, பொது நூலக இயக்குனர் கே.இளம்பகவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
30 நாடுகள்...
குறுகிய கால இடைவெளியில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், 30 நாடுகளில் இருந்து மட்டும் இந்த ஆண்டு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.
அதன்படி ஜப்பான், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தோனேசியா, இஸ்ரேல், தாய்லாந்து, அசர்பைஜின், உகாண்டா, வங்காளதேசம், அர்மீனியா, அர்ஜென்டினா, இத்தாலி, மலேசியா, டான்சானியா, துருக்கி, ஜார்ஜியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், அமெரிக்கா, கனடா, கத்தார், போர்ச்சுகல் உள்பட 30 நாடுகளின் அரங்குகள் இதில் இடம்பெற செய்யப்பட்டு இருக்கின்றன.
அந்தந்த நாடுகளின் அரங்குகளில், அங்கு புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள், பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன. இதுதவிர தமிழ் முற்றம் என்ற பெயரில் அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் தமிழ்நாட்டில் பிரபலமான புத்தகங்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
பிரமாண்ட திருக்குறள்புத்தகம்
மேலும் கண்காட்சியின் முத்தாய்ப்பாக பெரிய அளவிலான பிரமாண்ட திருக்குறள் புத்தகம் நுழைவுவாயில் அருகே வைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 106 திருக்குறள்கள் மற்றும் அதன் விளக்கங்கள் தமிழ் மற்றும் பிற மொழிகளில் (106 மொழிகளில்) அதில் இடம்பெற்று உள்ளன.
இதேபோல் வெளிநாட்டு எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கண்காட்சி நாளை (புதன்கிழமை) நிறைவு பெறுகிறது. அன்று மாலையில் நடக்கும் நிறைவு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
மொழிபெயர்ப்புக்குநிதி ஒதுக்கீடு
இந்த அரங்கம் புத்தகங்களை விற்பனை செய்வதற்கான அரங்கமாக இருக்காது. இது வெளிநாடுகளின் புத்தகங்களையும், அதேபோல் தமிழ்நாட்டின் புத்தகங்களையும் நாடுகளுக்கு இடையே மாறி விற்பனை செய்து கொள்ளும் தளம் மட்டுமே. தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லவும், உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கக்கூடிய இலக்கியங்களை இங்கே கொண்டு வரவும் அதற்கு ஏற்றாற்போல் மொழிபெயர்ப்பு செய்யப்பட உள்ளது. இதற்கென்று முதல்-அமைச்சர் ரூ.1 கோடியே 50 லட்சம் நிதியையும் ஒதுக்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஏராளமான புத்தகங்கள் இருந்தாலும், அதில் 100 புத்தகங்கள் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்றடைந்துள்ளது. இந்த ஆண்டு 30 முதல் 50 வரையிலான தமிழ்நாட்டு இலக்கிய புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வழங்க இருக்கிறோம்.
அதேபோல், மற்ற நாடுகளின் புத்தகங்களையும் வாங்கி மொழி பெயர்ப்பு செய்து வழங்குவோம். பார்வையாளர்கள் மாலையில் குறிப்பிட்ட நேரங்களில் அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு 30 நாடுகள் பங்கேற்றுள்ளன. அடுத்த ஆண்டு 60 நாடுகளில் இருந்து பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.