டெண்டர் பணிகளில் தலையிடும்அமைச்சர், எம்எல்ஏவை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலத்தில் டெண்டர் பணிகளில் தலையிடும் அமைச்சர், எம்.எல்.ஏ.வை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் தலைவர் மலர் தலைமையில் நடந்தது. ஒன்றியக்குழு துணை தலைவர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் தீர்மான நகல் வாசிக்கும் பணி தொடங்கியது. அப்போது ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் கூட்டத்திற்கு வந்துள்ளனரா என கவுன்சிலர் செந்தில்குமார் கேட்டார். அதற்கு ஊராட்சிகளில் சமூக தணிக்கை நடைபெறுவதால் அலுவலர்கள் அதற்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அலுவலர்கள் யாரும் வரவில்லை என்றால் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். அலுவலர்கள் வந்தால் தான் கூட்டத்தை முழுமையாக நடத்த முடியும், தீர்மான நகலை வாசிக்க வேண்டாம் என்றார். இதனால் தீர்மான நகல் வாசிக்கவில்லை.
சாலை மறியல்
இ்ந்த நிலையில் ஒன்றிய பணிகளில் எம்.எல்.ஏ., அமைச்சர், முதன்மை பொறியாளர் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எம்.எல்.ஏ., அமைச்சரை வைத்து கூட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள். நாங்கள் வீட்டிற்கு சென்று விடுகிறோம். ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. டெண்டர் பணிகளில் அமைச்சர், எம்.எல்.ஏ. தலையிடுவதை கண்டித்தும், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும், முறையற்ற முறையில் நடத்திய டெண்டர் பணிகளை உடனடியாக ரத்து செய்ய கோரியும், கூட்டத்தை புறக்கணிக்கிறோம் எனக்கூறி ஒன்றிய கவுன்சிலர்கள் அய்யாசாமி (சுயேட்சை), செந்தில்குமார் (சுயேட்சை), பாக்யராஜ் (பா.ம.க.), சரவணன் (பா.ம.க.), ஆனந்த கண்ணன் (சுயேட்சை), தனக்கோடி (அ.தி.மு.க.), செல்வராசு (பா.ம.க.), ரோஸி (பா.ஜ.க.), பூங்கோதை (பா.ம.க. ஒன்றியக்குழு துணை தலைவர்), நீலாவதி (தே.மு.தி.க.), ராசாத்தி (அ.தி.மு.க.) உள்ளிட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள், விருத்தாசலம் கடலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா, விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதனை ஏற்ற கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டதுடன் ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகளிலும் ஒன்றிய பொது நிதியிலும் டெண்டர் பணிகளிலும் அமைச்சர், எம்.எல்.ஏ., முதன்மை பொறியாளர் தலையீடு இருந்தால் இனிமேல் நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்போம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.