விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டி இல்லா பயிர் கடன் - கலெக்டர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டி இல்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2023-10-26 19:00 GMT

தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு கடன் வழங்கும் விழா தென்காசி அருகே உள்ள நன்னகரம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்றார். சுய உதவி குழு கடன், விவசாய பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், அடமான கடன் மற்றும் சிறு வணிக கடன் உள்பட ரூ.2.23 கோடி கடனுக்கான காசோலைகளை 52 பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஒரு நகர கூட்டுறவு கடன் சங்கம், 4 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் 2 வேளாண் விற்பனை சங்கங்கள், நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 16 கிளைகள் மூலமாக பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.90 கோடிக்கு கடன்

விவசாயிகள், நகர்ப்புற மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு இயக்கம் சேவை செய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கால்நடை பராமரிப்பு கடன் 4,686 பேருக்கு ரூ.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தென்காசி மாவட்டத்தில் இதர வகை கடனாக நடப்பாண்டில் 89 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32.48 லட்சமும், 102 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.27.48 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீடு அடமான கடனாக 43 பேருக்கு ரூ.21.50 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 4 மருந்தகங்கள் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையங்கள் மூலமாக கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மின்னணு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 46,818 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கூட்டுறவு துறை சங்கரன்கோவில் சரக துணை பதிவாளர் திவ்யா, மேலகரம் பேரூராட்சி தலைவி வேணி வீரபாண்டியன், துணைத் தலைவர் ஜீவானந்தம், கவுன்சிலர் சிங்கத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைப் பதிவாளர் கார்த்திக் கவுதம் நன்றி கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்